பரங்கிபேட்டைக்கு தொடர்ந்து அநீதி இழைக்கும் தென்னக ரயில்வே - RTI தந்த அதிர்ச்சித் தகவல்கள்
பயணிகளின் வருகையும், வருமானமும்தான் ஒரு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்படுவதாக தென்னக ரயில்வேயின் பல்வேறு செய்தி குறிப்புகள் தகவல்களைத் தருகின்றன. ஆனால், கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை ரயில் நிலையம் மட்டும் தென்னக ரயில்வேயால் தொடர்ந்து புறக்கணிப்புக்கு உள்ளாகும் காரணம் என்னவென்று மக்களுக்குத் தெரியவில்லை.
தகவல் அறியும் உரிமைச் சட்டப்போராளி பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ, "பரங்கிப்பேட்டை, கிள்ளை, புதுச்சத்திரம், ஆலப்பாக்கம் உள்ளிட்ட ரயில் நிலையங்களின் பயணிகளுக்கான வசதிகள்" குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் விபரங்கள் கோரியிருந்தார்.
இதற்கு தென்னக ரயில்வே, திருச்சி கோட்டம் தந்துள்ள பதில் மிகுந்த பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக வருமானம் பெற்றுத் தரும், அதிக பயணிகள் வருகை தரும், தினந்தோறும் எட்டு ரயில்கள் நின்று செல்லும் பரங்கிப்பேட்டை ரயில்வே நிலையம் ஒற்றை இருப்புப் பாதையுடன் மிக மிகக் கீழ் தள்ளப்பட்டு எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி உள்ளது. ஆனால், பயணிகள் வருகையும், வருமானமும் மிக மிக குறைவாக இருக்கக்கூடிய, ஆறு ரயில்கள் நின்று செல்லக்கூடிய அருகிலுள்ள மற்ற ரயில் நிலையங்கள் இரண்டு / மூன்று பாதைகளுடன் வசதிகள் மேம்படுத்தப்பட்டு இருக்கின்றன.
தென்னக இரயில்வே, திருச்சி கோட்டம் தந்துள்ள பதிலில், 2018 ஆம் ஆண்டு வரை பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், ஆலப்பாக்கம் மற்றும் கிள்ளை ஆகிய நான்கு ரயில் நிலையங்களும் E என்ற தரத்தில்தான் இருந்துள்ளன. 2019 - 2021 வரையுள்ள தகவல்களை தராமல் ரயில்வே துறை மறைத்துள்ளது. 2022-2023 ஆண்டுகளில் பரங்கிப்பேட்டை மட்டும் HG-2 ஆக தரம் இறக்கப்பட்டு மற்ற மூன்று ரயில் நிலையங்களும் NSG-6 என்ற தரத்தில் வைக்கப்பட்டுள்ளன. இடைப்பட்ட ஆண்டுகளில் என்ன நடந்தது? என்ற மற்றுமொறு கேள்விக்கு இதுவரை ரயில்வே நிர்வாகம் பலமுறை கேட்டும் பதில் தரவில்லை.
பயணிகளின் வருகை மற்றும் ஆண்டு வருமானம் போன்றவற்றை ஆராயும்போது 2019-20 காலகட்டங்களில் பரங்கிப்பேட்டையில் 149,160 பயணிகள் வருகையும், 11.45 லட்சம் வருமானமும், கிள்ளையில் 68,487 பயணிகள் வருகையும், 4.9 லட்சம் வருமானமும், ஆலப்பாக்கத்தில் 47,432 பயணிகள் வருகையும், 2.97 லட்சம் வருமானமும், புதுச்சத்திரத்தில் 20,258 பயணிகள் வருகையும், 1.58 லட்சம் வருமானமும் கிடைத்துள்ளது. அதாவது, சராசரியாக ஒரு நாளைக்கு பரங்கிப்பேட்டையில் 409 பயணிகளும், கிள்ளையில் 188 பயணிகளும், புதுச்சத்திரத்தில் 56 பயணிகளும், ஆலப்பாக்கத்தில் 130 பயணிகளும் பயணம் செய்துள்ளனர்.
மேற்கண்ட ரயில் நிலையங்களிலிருந்து பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து திருச்சி கோட்டம் குறிப்பிடும் தகவல்களை பார்த்தால் பரங்கிப்பேட்டைக்கு மட்டும் எந்தளவுக்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது என்பது தெள்ளத் தெளிவாக விளங்கும்.
உதாரணத்திற்கு...
1. பயணச் சீட்டு வழங்கும் கவுண்டர்: பரங்கிப்பேட்டை மற்றும் புதுச்சத்திரத்தில் தலா ஒன்றும், ஆலப்பாக்கம் மற்றும் கிள்ளையில் தலா இரண்டும் உள்ளன.
2. காத்திருப்பு அறை: பரங்கிப்பேட்டையில் 39, புதுச்சத்திரத்தில் 39, ஆலப்பாக்கத்தில் 46 மற்றும் கிள்ளையில் 53 சதுர அடிகளில் கட்டப்பட்டுள்ளது.
3. குடி தண்ணீர் குழாய்கள்: பரங்கிப்பேட்டையில் 2, புதுச்சத்திரத்தில் 5, ஆலப்பாக்கத்தில் 7 மற்றும் கிள்ளையில் 6 உள்ளன.
4. கழிப்பிட வசதி: பரங்கிப்பேட்டை மற்றும் புதுச்சத்திரத்தில் தலா 2, ஆலப்பாக்கத்தில் 3 மற்றும் கிள்ளையில் 6 உள்ளன.
5. சிறுநீர் கழிக்குமிடம்: பரங்கிப்பேட்டையில் 1, புதுச்சத்திரம் மற்றும் ஆலப்பாக்கத்தில் தலா 2, கிள்ளையில் 4 உள்ளன.
6. பயணிகள் அமரக்கூடிய இருக்கைகள்: பரங்கிப்பேட்டையில் 40, புதுச்சத்திரத்தில் 63, ஆலப்பாக்கத்தில் 230 மற்றும் கிள்ளையில் 39 அமைக்கப்பட்டுள்ளன.
7. மின் விசிறி: பரங்கிப்பேட்டையில் அறவே இல்லை. புதுச்சத்திரத்தில் 2, ஆலப்பாக்கம் மற்றும் கிள்ளையில் தலா 1 உள்ளன.
8. மின் விளக்குகள்: பரங்கிப்பேட்டையில் 25, புதுச்சத்திரத்தில் 90, ஆலப்பாக்கத்தில் 57 மற்றும் கிள்ளையில் 47 அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தகவல்ககளின் அடிப்படையில், தினந்தோறும் சுமார் 409-க்கும் மேற்பட்ட பயணிகள் வரக்கூடிய பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்திற்கும், 56, 130 மற்றும் 188 பயணிகள் வரக்கூடிய மற்ற ரயில் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள பயணிகளுக்கான வசதிகளை நடுநிலையோடு பார்த்தால் தென்னக ரயில்வேயின் புறக்கணிப்பு நன்றாக விளங்கும்.
ஒரே பகுதியில் இருக்கக் கூடிய, அதிலும் பாரம்பரிய மிக்க, அதிக வருமானம் தரக்கூடிய, அதிகமாக பயணிகள் வந்து செல்லக்கூடிய ஒரு ரயில் நிலையத்தை குறி வைத்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டார்களா? என்ற நியாயமான சந்தேகம் வருவது இயல்புதானே. அதன் காரணமாகத்தான் பிற ரயில் நிலையங்களையும் ஒப்பீடு செய்து பார்க்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
அதற்காக பிற ரயில் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளை குறைக்க வேண்டும் என்பது நம் என்ணம் அல்ல. அந்த நிலையங்களுக்கு இன்னும் மேலதிக வசதிகளை தொடர்ந்து ரயில்வே துறை செய்யட்டும். அதே போன்று பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தையும் கவனிக்கட்டும். ஒரு கண்ணில் வெண்ணையும், மறு கண்ணில் சுண்னாம்பும் என்ற பாகுபாடு காட்ட வேண்டாம் என்பதுதான் பரங்கிப்பேட்டை மக்களின் கோரிக்கை.
பரங்கிப்பேட்டை ரயில் நிலையம் மிக மிக மிக ரயில்வே துறையால் புறக்கணிக்கப்பட்டு பாரபட்சம் காட்டப்பட்டு இருக்கின்றது. இதற்கு நடவடிக்கை எடுப்பது யார்?
அதிகமாக பயணிகள் வரக்கூடிய, அதிக வருமானம் தரக்கூடிய ரயில் நிலையங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமா? இல்லையா? அதற்காக வைக்கப்படும் மக்களின் கோரிக்கைகளை ஏற்று மேலதிக செயற்பாடுகளை செய்ய வேண்டுமா இல்லையா?
தென்னக இரயில்வே, திருச்சி கோட்ட இரயில்வே அதிகாரிகளின் இந்த பாரபட்ச போக்கை தட்டிக் கேட்பது யார்? பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தின் பாரம்பரியத்தை அதற்குண்டான வசதிகளுடன் மீட்டுக் கொண்டு வருவது யார்?
பதில்களை எதிர்பார்த்து பரங்கிப்பேட்டை மற்றும் சுற்று வட்டார மக்கள்.
- நமது சிறப்பு செய்தியாளர்
Tags: செய்திகள்