Breaking News

அனைத்து எதிர்கட்சிகளும் ஒர் அணியில் நிற்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி கடிதம்

நிர்வாகி
0





மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம் எல் ஏ காங்கிரஸ், திமுக, இடதுசாரி கட்சிகள், திரினாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், டிஆர்எஸ், வைஎஸ்ஆர் காங்கிரஸ், பிஜீ ஜனதா தனம், அகாலி தளம் உள்ளிட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்களுக்கு பின் வரும் கடிதத்தை அனுப்பியுள்ளார்:


அதில் கூறியிருப்பதாவது...


நமது நாட்டில் பாசிசம் அசுரமாக வளர்ந்து வரும் இச்சூழலில் ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் தங்களுக்கு இந்த வேண்டுகோள் கடிதத்தை எழுதுகிறேன். 


 நமது மாபெரும் தேசம் கடந்த காலங்களில் பிரதிபலித்த அடிப்படை பண்புகளையும் விழுமியங்களையும் 

கூச்சமில்லாமல் வெளிப்படுத்தப்படுத்தப்பட்டு வரும் கொடுங்கோன்மையும் அடக்குமுறையும் அரித்து வரும் இச்சூழலில் அனைத்து எதிர்கட்சிகளும் ஒர் அணியில் நிற்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்துவதற்காகவே இம்மடலை வரைகின்றேன்.


கடந்த எட்டாண்டு கால மோசமான ஆட்சியில் இரக்கமில்லா ஒடுக்குமுறை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. இத்தகைய ஒடுக்குமுறைக்கு காரணம் நம்மிடமிருந்து எதிர்ப்பு இல்லாமல் போனது அல்ல. நம்மிடையே ஒன்றுப்பட்ட ஒற்றுமை இல்லாமல் போனதே இதற்கு காரணம்.


வலிமையான அரசியல் தலைவர்கள் தனித்து எதிர்க்கும் போது அவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து அவர்கள் சிறையில் அடைப்படும் சூழல் உருவாக்கப்படுகின்றது. 1991 வழிப்பாட்டு தலங்கள் பாதுகாப்பு சட்டம் ஆட்சியில் இருப்பவர்களின் உறுதுணையுடன் குப்பை தொட்டியில் வீசப்பட்டு வருகின்றது. வஞ்சகமான மத சகிப்பின்மையின் வெளிப்பாட்டின் காரணமாக பிரபல இஸ்லாமிய அறிஞர் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. 

உ.பி.யில் ஒரு இஸ்லாமிய மார்க்க அறிஞர் சிறைத்தண்டனை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டது. கும்பல் படுகொலைகளினால் பல அப்பாவி முஸ்லிம்கள் உயிர் இழக்கும் கொடுமையும் ஏற்பட்டது.


சகிப்புத்தன்மை, பிறர் உரிமைகளைப் பேணுவது, ஒற்றுமையாக கூடி வாழ்வது போன்ற பண்பாடுகளை உலகின் பல நாடுகள் பின்பற்றுவதற்கு உந்து சக்தியாக இருந்தது நமது நாடு. 

இன்றோ நமது தலைமையை ஏற்றுக் கொண்ட கூட்டாளி நாடுகளினால் கூட கண்டிக்கப்படும் அவல நிலை நம்நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது. 


நியாயமான முறையில் போராடுபவர்களின் மனைவியர் பெயரில் உள்ள வீடுகளை புல்டோசர்கள் கொண்டு இடிக்கும் கொடுரமான நிலைக்கு வெறுப்பரசியல் தரம் தாழ்ந்துள்ளது.  


உச்சநீதிமன்றம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை புறந்தள்ளி ‘புல்டோசர் அநீதி’ மேலோங்கி வருவது நமது நாடு எத்தகைய அவலத்தில் சிக்கியுள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. 


இந்திய ஜனநாயகம் வரலாறு காணாத வகையில் தரம் தாழ்ந்துள்ளதை மீட்டெடுக்க போராடுவது காலத்தின் கட்டாயமாகும். தற்போது சிதைக்கப்பட்டு வரும் நமது நாட்டின் ஆன்மாவினால் நேசிக்கப்படும் அமைதி சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் உயிர்ப்பிக்கப்படுவதற்கு ஒன்றுப்பட்டு செயல்படுவது மட்டுமே வழியாகும்.


மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனநாயகம் இன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஏகாதிபத்தியமாக உருமாறிவிட்டது. இதற்கு காரணம் ஏகாதிபத்தியமாக ஜனநாயகத்தை மாற்றியவர்களுக்கு எதிராக போராடுவதற்கு நாம் ஒன்றிணையத் தவறியது தான். 


நமது விடுதலைப் போராட்டத்தின் மாபெரும் தளகர்த்தர்கள் கண்ட கனவையும் அவர்களது ஆசைகளையும் நிறைவேற்ற வேண்டுமெனில் அழிவின் பாதையில் நாட்டை அழைத்துச் செல்லும் இந்த சக்திகளை எதிர்கொள்ள நன்கு ஒன்றிணைந்த எதிர்வினையை ஆற்றுவது அவசியமானது. நமது முன்னோர்கள் ஒவ்வொரு கண்களிலிருந்து வடியும் ஒவ்வொரு துளி கண்ணீரையும் துடைப்பதற்கு நமக்கு கற்று தந்த பாடத்தை நாமும் நிறைவேற்றினோம் என்பதை வரலாறு பதிவு செய்திட இத்தகைய ஒன்றிணைந்த எதிர்வினை தேவைப்படுகின்றது.


 நமது நாட்டின் இலச்சினை ‘வாய்மையை வெல்லும்’ என்று பறைசாற்றுகின்றது. இதற்கு முரணாக பொய்மை வெற்றியை சுவைப்பதை தடுப்பதற்கு நாம் ஒன்றிணைந்து களம் காண்பது இன்றியமையாதது. 


பொய்மை வெற்றி அடைந்ததை போல் அறிகுறிகள் தென்படுகின்றன. மக்களின் அமோக ஆதரவை பெற்றதின் விளைவு அல்ல இது. மாறாக பன்னெடுங்கால சதியான பரித்தாளும் சூழ்ச்சியால் தான் இந்த அறிகுறிகள் தென்படுகின்றன. எனவே அனைத்து வகையான சமூக, அரசியல் மற்றும் தனிநபர் விருப்பங்களையெல்லாம் கடந்து நாட்டின் அனைத்து திசைகளிலும் உள்ளவர்கள் ஒன்றிணைவது நமது வரலாற்றுக் கடமையாகும்.


தற்போதைய மிக மோசமான சூழலில் தேசிய கட்சிகள், மாநில கட்சிகளும் இதே போல் பட்டியலினத்தவரை, சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் ஒரு சேர ஒரு குறைந்த பட்ச செயற்பாட்டு திட்டத்தை வகுத்து ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு-நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு’  என்ற தத்துவத்தின் அடிப்படையில் ஒன்று சேர்வது ஒரு தேசிய கடமையாகும். 


இந்த அடிப்படையில் ஒன்று சேர நமக்கு ஒரு பெரும் வாய்ப்பாக குடியரசுத் தலைவர் தேர்தல் அமைந்துள்ளது. இதில் ஒரு வலிமையான கூட்டணியை அமைத்து அதன் நீட்சியாக 2024 நாடாளுமன்றத் தேர்தலையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு நாட்டைக் காக்க முன்வர வேண்டும் என்று மனமுருகி கேட்டுக் கொள்கிறேன்.


நன்றி


மிகுந்த எதிர்பார்ப்புடன்

எம் எச் ஜவாஹிருல்லா

தலைவர்

மனிதநேய மக்கள் கட்சி

Tags: செய்திகள்

Share this