எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலகக்குழு மற்றும் மண்டல தலைவர்கள் ஆலோசனைக்கூட்டம்
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலகக்குழு மற்றும் மண்டல தலைவர்கள் ஆலோசனைக்கூட்டம் இன்று(08.11.2022) சென்னையில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், எஸ்.டி.பி.ஐ கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.ஃபைஜி, செயலாளர் அப்துல் சத்தார், செயற்குழு உறுப்பினர்கள் முகமது பாரூக், முகைதீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மேலும் இக்கூட்டத்தில், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர்கள் அச.உமர் பாரூக், அகமது நவவி, நிஜாம் முகைதீன், மாநில செயலாளர்கள் அபுபக்கர் சித்திக், ரத்தினம், ஏ.கே.கரீம், மாநில பொருளாளர் அமீர் ஹம்ஸா மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மண்டல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கேஃபைஜி கூறியதாவது:
1. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள், மக்களுக்கு தேவையான அடிப்படை பிரச்சினைகளை சரிசெய்வதில் கவனம் செலுத்த வேண்டிய ஒன்றிய அரசு மதரீதியான பிரச்சினைகளிலேயே கவனம் செலுத்தி வருகின்றது.
நாட்டில் அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட நாட்டை பின்னோக்கி கொண்டுச் செல்லும் பிரச்சனைகள் குறித்து கவலைப்படாமல் இமாச்சலப் பிரதேசத் தேர்தலில் பொதுசிவில் சட்டத்தை கொண்டுவருவோம் என தேவையற்ற வகுப்புவாத பேச்சுக்களை பேசுவதன் மூலமாக மக்களை மடைமாற்றுவது கண்டிக்கத்தக்கது. எனவே ஒன்றிய அரசு இந்த விசயத்தில் தன்னை திருத்திக் கொண்டு, நாட்டு மக்களுக்காக, மக்களின் முன்னேற்றத்துக்காக உழைக்கிற ஒரு அரசாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
ஒன்றிய அரசின் இத்தகைய செயல்பாடுகளை எதிர்க்கக்கூடிய ஜனநாயக சக்திகள் அனைத்தும் தங்களுக்கிடையேயுள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து ஓரணியில் திரள வேண்டும். நாட்டினுடைய ஆபத்தான சூழலை கருத்தில் கொண்டு அவர்கள் ஒன்றிணைய வேண்டுமென எஸ்.டி.பி.ஐ. கட்சி அறைகூவல் விடுக்கிறது.
2.பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி பிரிவினருக்கு (EWS) 10 சதவீத இடஒதுக்கீட்டை அனுமதிக்கும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பு இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிரானது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கின்றது. 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் எஸ்.டி.பி.ஐ. கட்சியும் ஒரு மனுதாரர் என்பதால், இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யுமாறு எஸ்.டி.பி.ஐ. கட்சி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யும் என தெரிவித்துக் கொள்கிறேன்.
3. நாட்டின் பல்வேறு சமூக, இன மக்கள் காலங்காலமாக பின்பற்றிவரும் தனியார் சட்டங்களை ரத்து செய்வது, பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவது போன்ற நடவடிக்கையானது, உண்மையான பிரச்சினைகளிலிருந்து நாட்டு மக்களை திசை திருப்புகிற நடவடிக்கையாகும்.
இந்தியாவில் வாழுகிற பல்வேறு கலாச்சார, இன, மத மற்றும் மொழியியல் குழுக்கள் குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் உள்ளிட்டவர்கள் பின்பற்றும் தனிப்பட்ட சட்டங்களை இல்லாமலாக்கி, ஆர்.எஸ்.எஸ்-ன் ஒற்றைக் கலாச்சாரத்தை நோக்கி நாட்டை கொண்டு செல்வதுதான் அதன் நோக்கமாக உள்ளது.
ஆகவே, நாட்டின் பன்முகத்தன்மையை காக்கப்பட இந்த விவகாரத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும் எதிர் குரல் எழுப்ப வேண்டும். மேலும், அனைத்து சமூக மக்களும் தங்களின் தனியார் சட்டங்களை பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளா வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
4. பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளாத மாநில அரசுகளுக்கு ஆளுநர்கள் மூலம் இடையூறு ஏற்படுத்தும் நிகழ்வுகள் நடந்தேறி வருவது கூட்டாட்சி முறைக்கு எதிரான செயலாகும். ஆளுநர்களைக் கொண்டு ஒரு மாநில அரசுகளின் செயல்பாடுகளை தடுத்து வைப்பது, மாநில அரசின் உரிமைகளை தர மறுப்பது என்பன போன்ற கூட்டாட்சிக்கு சவால் விடுக்கும் நடவடிக்கைகள் ஒன்றிய பாஜக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.
மேலும் மாநில சுயாட்சிக்கு கேடு விளைவிக்கும் நடவடிக்கைகள், இந்தி மொழியை கட்டாயமாக திணிக்கும் நடவடிக்கைகள் போன்றவை எல்லாம் தவறான நடவடிக்கைகளாகும். இந்தி மொழிக்கு எதிரானவர்கள் நாங்கள் அல்ல. ஆனால் இந்தி மொழி திணிப்பதற்கு எதிரானவர்கள். ஆகவே இது போன்ற நடவடிக்கைகள் உடனடியாக கைவிடப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags: செய்திகள்