Breaking News

காவு வாங்க காத்திருக்கும் மத்திய அரசு... வீராணம் ஏரிக்கரை பகுதியை சூழ்ந்துள்ள பேராபத்து....

நிர்வாகி
1


காணாமல் போன ஊர்கள்.... 

காவு வாங்க காத்திருக்கும் மத்திய அரசு...

வீராணம் ஏரிக்கரை பகுதியை சூழ்ந்துள்ள பேராபத்து.... 


கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தீட்டிய கள்ளிக்காட்டு இதிகாசம் எனும் நாவலில் பல்வேறு கிராமங்களில் வசிக்கும் குடியிருப்புகள், விவசாய நிலங்கள் ஆகியவற்றை பலவந்தமாக அப்புறப்படுத்தி விட்டு அரசு அங்கு அணைக்கட்டு ஒன்றை நிர்மாணித்த வலி மிகுந்த துயரத்தை கண்ணீர் காவியமாக வடித்திருப்பார். 


வைகை அணை கட்டப்பட்டபோது அதன் நீர்தேங்கும் பரப்புக்காக காலிசெய்யப்பட்ட 14 கிராமங்களின் பூர்வகதைதான் கள்ளிக்காட்டு இதிகாசம். மண்சார்ந்த மக்கள் மண்ணோடும் வாழ்வோடும் நடத்திய போராட்டங்களை வலியோடு சொன்ன படைப்பு அது. வட்டார வழக்கோடு எழுதப்பட்ட உலகத் தன்மை கொண்ட அந்த நாவல் 2003ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது.


அந்த காவியத்தில், தமது வாழ்வாதாரங்கள் மற்றும் வசிப்பிடங்களை விட்டு விட்டு கண்ணீரோடும், ஒப்பாரியோடும் சொந்த நாட்டில் அகதியாக்கப்பட்ட மக்களின் ஓலங்களின் உண்மை நிகழ்வுகள், நம் கடலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியில் தொடர்ந்து  கொண்டிருக்கிறது.., இந்த அழுகுரல்கள் நம்மில் எத்தனை பேருக்கு இதுவரை கேட்டிருக்கிறது...?? 


ஆம்..


நாட்டின் மின் உற்பத்தி மற்றும் மின்சார தேவைக்காக 1956 ஆம் ஆண்டிலிருந்து தென்னாற்காடு மாவட்டத்தின் விருத்தாச்சலம், பண்ருட்டி, வடலூர், கம்மாபுரம் ஆகிய சுற்றுவட்டப் பகுதியில் நெய்வேலி என்ற பகுதியை மையமாக வைத்து நெய்வேலி நிலக்கரி நிறுவனம் (NLC)  மூலமாக சுரங்கம் வெட்டி, நிலக்கரி எடுத்து அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது என்கிற தகவல் மட்டுமே மேலோட்டமாக நமக்கு தெரியும். வடலூர், விருத்தாச்சலம், கம்மாபுரம் மார்க்கமாக போகிற வழியில் அந்த சுரங்கங்கள், அனல் மின் நிலைய கோபுரத்தில் இருந்து வெளியேறும் புகை ஆகியவற்றை தூரத்தில் இருந்து நம் பார்வைக்கு தெரியும். இந்த அளவுக்கு மட்டுமே அது பற்றி நாம் அறிந்த வைத்துள்ளோம். 


அங்கு தோண்டப்பட்ட நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் அனல் மின் நிலையம் ஆகியவை மக்களின் வசிப்பிடங்கள் அவர்களின் வாழ்வாதாரங்கள் ஆகியவற்றை பலவந்தமாக பிடுங்கி அவற்றை அழித்து அதன் மீது தான் உருவாக்கப்பட்டது என்கிற அதிர்ச்சிகரமான பேருண்மையை பற்றி அறிந்திருக்கிறீர்களா??? 


தெரியவில்லை என்றால் ஒருமுறை சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் இருந்து விருத்தாசலம் சென்று அங்கிருந்து நெய்வேலி வழியாக வடலூர் வரை பயணித்து விட்டு பின்னர், நெய்வேலி வடலூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள், வியாபாரிகள் ஆகியோரிடம் விசாரித்து பாருங்கள்.... அங்கு அழிக்கப்பட்ட கிராமங்கள், என்எல்சி நிறுவனத்துக்கு தங்களின் இடத்தை பறிகொடுத்து விட்டு இன்று வரைக்கும் அதற்கான உரிய இழப்பீடுகளை பெற இயலாமல் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் அப்பாவி மக்களின் கண்ணீர் கதைகளை தெரிந்து கொள்ள முடியும். 


நிற்க.....


நாட்டில் தற்போது அதிகரித்து வரும் மின் தேவையை கருத்தில் கொண்டு, புதிய பல மின்சார உற்பத்தி திட்டங்களை ஒன்றிய அரசு தொடங்கும் நடவடிக்கையில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறது.


அதன் அங்கமாக, கடலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் இயங்கி வரும் மண்டலத்தின் அருகாமையில் உள்ள பகுதிகளில் மேலும் நிலக்கரி கிடைக்கிறதா என்று ஆய்வுப் பணிகள் துவங்கியுள்ளது. 


அதன்படி, வீராணம் ஏரிக்கு மேற்கே பாளையம் கோட்டை, வீராணம் ஏரிக்கரையில்  லால்பேட்டை தொடங்கி கந்தகுமாரன் வரை உள்ள பகுதி மற்றும் கந்தகுமாரன் தொடங்கி வீராணம் ஏரி முடியும் வரை உள்ள பகுதி ஆகியவற்றை....


1.பாளையம்கோட்டை நிலக்கரி மண்டலம் 

2. வீராணம் நிலக்கரி மண்டலம்-1

3. வீராணம் நிலக்கரி மண்டலம்-2 


என்பதாக மூன்று மண்டலங்களாகப் பிரித்து, இந்த பகுதிகளில் பல்வேறு இடங்களில் ஆழ்துளை கிணறுகள் தோண்டி அவற்றின் மூலம் ஆய்வு செய்து இங்கெல்லாம் நிலக்கரி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 


இந்த ஆய்வு பற்றிய முழுமையான ஆய்வினை மத்திய அரசின் சுரங்கத் துறையின் கீழ் இயங்கும் MECL ( Mines Exploration consultancy Limited) என்கிற  நிலக்கரி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் நிறுவனம் நடத்தி முடிந்துள்ளது. அது தொடர்பான முழுமையான ஆய்வறிக்கைகளை கீழ் காணும் இணையதளத்தில் காண முடிகிறது.

https://www.mecl.co.in/InternalPageMecl.aspx?Antispam=60NQWT3Nul0&ControlID=79&Lng=EN&MyAntispam=0LgoT4SziFW 

இதில் கூடுதல் தகவல் என்னவென்றால்.., MECL நிறுவனம் லால்பேட்டையில் கடந்த 5 ஆண்டுகளாக அலுவலகம் அமைத்து இந்த ஆய்வு பணிகளை ஒருங்கிணைத்து செயல்பட்டு வந்துள்ளது என்கிற தகவல், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலரும், மீத்தேன் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் த. செயராமன் அவர்கள் 27.12.2022 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.....


காவிரிப்படுகை கடலூர் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை! 


காட்டுமன்னார் கோயில், குமராட்சி, புவனகிரி, குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் லிக்னைட் சுரங்கம் அமைக்க முன் ஆய்வு செய்ய MECL நிறுவனம் வேலைகளைத் தொடங்கியுள்ளது. இதற்கு "வீராணம் புராஜக்ட்" என்று பெயர்.  "நீர் ஆய்வு, மண் ஆய்வு" என்று பொய் கூறி, முதற்கட்டப் பணியை நடத்த முயற்சிக்கிறார்கள். MECL செய்வது லிக்னைட் எடுப்பதற்கான முன் ஆய்வுதான். இக்கருத்து சரியானதும், உறுதிசெய்யப்பட்டதும் ஆகும்.


 இப்பகுதிய மக்களை விரட்டிவிட்டு திறந்தவெளி சுரங்கம் அமைத்து நிலக்கரி எடுப்பார்கள். வயல்கள் கரிக்காடு ஆகும். குடியிருப்புகள் குலைந்துபோகும். மக்கள் அகதிகள் ஆவார்கள்! எச்சரிக்கை! 


MECL மற்றும் அதற்குக் கையாளாக செயல்படும் அதிகாரிகளின் சொற்களை நம்பவேண்டாம்! பணத்திற்கு ஆசைப்பட்டு இத்தகைய ஆய்வுகளை அனுமதிக்கவும் வேண்டாம், நிலத்தைக் கொடுக்கவும் வேண்டாம். இன்று ஒரு சிலர் செய்யும் தவறு நாளை ஒட்டுமொத்தத் பகுதியையுமே நிலக்கரிச் சுரங்கமாக மாற்றி விடும். கடந்த காலத்தில் நெய்வேலி லிக்னைட் சுரங்கம் அமைக்க தங்கள் வயல்களையும், வாழ்விடத்தையும் கொடுத்தவர்கள் இன்று வரை போராடிக் கொண்டிருக்கிறார்கள். எந்த குடும்பத்தின் பிள்ளைகளுக்கும் நிரந்தரப் பணி என்பது வழங்கப்படவில்லை; விவசாயத்தை இழந்தது தான் மிச்சம். 


எச்சரிக்கையாக இருந்து அடுத்தத்  தலைமுறைக்கு இந்த மண்ணை பத்திரமாக ஒப்படைக்க வேண்டியது நம் கடமை என்பதை மறக்க வேண்டாம். காவிரிப் படுகை கரிக்காடு ஆவதைத் தடுத்து நிறுத்துவோம்!  இதுகுறித்து மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தன் பணிகளைச் செய்து வருகிறது!


....என்று எச்சரிக்கை மணி அடித்துள்ளார்.....! 


இந்த எச்சரிக்கையை கேட்டும் வழக்கம் போல கடந்து செல்லப் போகிறோமா...??  அல்லது நம் மண்ணை காக்கும் வகையில் ஜனநாயக ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கப் போகிறோமா...?? 


முடிவு நம் அனைவரின் கைகளில்....,


குறிப்பு: இந்த பதிவு விழிப்புணர்வு அடிப்படையில் எழுதப்பட்டது. யார் வேண்டுமானாலும் தங்களது பெயரில் இதை வெளியிட்டு கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.


இப்படிக்கு, 


எப். முஹம்மது ரிஃபாயி,

கொள்ளுமேடு.

16.01.2023

Tags: கட்டுரை லால்பேட்டை

Share this

1 Comments