தஞ்சையில் நடைபெற்ற மஜக. எட்டாம் ஆண்டு தொடக்க விழா... பிரதிநிதிகள் சங்கமம்
28, பிப்ரவரி - 2023
டைமண்ட் மஹால் வளாகம் தஞ்சாவூர்.
கலைஞர். மு.கருணாநிதி அரங்கம் ..
கோவை.நாசர் மேடை..
வாணியம்பாடி. வசீம் அக்ரம் நுழைவு வாயில் ...
கீழக்கரை. அப்துல் சமது விருந்தோம்பல் வளாகம்...)
மனிதநேய ஜனநாயக கட்சியின் எட்டாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, மஜக பிரதிநிதிகள் சங்கமம் , நிகழ்ச்சி பொதுச் செயலாளர் மு. தமிமுன் அன்சாரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் 725 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் உள்ள 2000 அதிகமானோர் பங்கேற்றனர்.
இதில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் பின்வருமாறு...
1. தேசத்தை காப்போம்
இந்தியாவின் ஜனநாயகத்தையும், தன்னாட்சி அதிகாரம் பெற்ற அரசு அமைப்புகளையும், நீதிமன்ற சுதந்திரத்தையும் பாழ்படுத்தும் ஒன்றிய அரசின் போக்குகளும், அதற்கு மதவாத சக்திகள் துணை நிற்பதும் நாட்டின் எதிர்காலத்திற்கு பேராபத்தை உருவாக்குகிறது.
தேசத்தை காப்பாற்றும் கடமை ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் இருக்கிறது என்பதால், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சமூகநீதி, மதச்சார்பின்மை, தேச நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என இக்கூட்டம் அனைவரையும் கேட்டுக்கொள்கிறது.
2. இட ஒதுக்கீடு
தற்போது தமிழக அரசால் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3.5% இட ஒதுக்கீட்டை 5% சதவீதமாக உயர்த்தி தர மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இக்கூட்டம் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
3. சிறைவாசிகள் முன் விடுதலை
20 ஆண்டு காலத்தை கடந்து தமிழக சிறைகளில் வாடும் ஆயுள் சிறைவாசிகளை மனிதாபிமானத்தின் அடிப்படையில் சாதி - மத - வழக்கு பேதமின்றி தமிழக அரசு முன் விடுதலை செய்ய வேண்டும் என்றும், முதல் கட்டமாக நோயாளி கைதிகளையாவது முன் விடுதலை செய்ய வேண்டும் என்றும் இக் கூட்டம் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
4. தமிழக அரசுக்கு பாராட்டு
சமூக நீதி, நல்லிணக்கம், வளர்ச்சி ஆகிய விவகாரங்களில் "திராவிட மாடல் அரசு" என்ற முழக்கத்தோடு செயல்பட்டு வரும் தமிழக அரசுக்கும், மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் இக்கூட்டம் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
5. சாதிவாரி கணக்கெடுப்பு
பீகார் மாநில அரசு மேற்கொண்டிருப்பது போல தமிழக அரசும் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு சமூகத்தின் மக்கள் தொகை அடிப்படையில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்றும் இக்கூட்டம் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.
6. மேம்பாட்டு நிதி
இந்திய அளவில் முஸ்லிம் சமூகம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக நீதியரசர் சச்சார் கமிட்டியின் பரிந்துரைகள் புள்ளிவிவரங்களுடன் கூறியுள்ளது.
எனவே முஸ்லிம்களின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு, அவர்கள் செலுத்தும் வருமான வரியில் இருந்து 10 % சதவீதத்தை அவர்களின் மேம்பாட்டுக்கு ஒன்றிய அரசு உயர்த்த வேண்டும் என இக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
7. வக்பு சட்டதிருத்தம்
இந்திய அளவில் ரயில்வே மற்றும் ராணுவத்திற்கு அடுத்த பெரிய சொத்துக்களை கொண்டதாக வக்பு வாரியம் திகழ்கிறது.
நாடு தழுவிய அளவில் வக்பு சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை மீட்டெடுக்கும் சட்டப்பூர்வ முயற்சிகளும் தோல்வியை தழுவுகின்றன.
இது குறித்து ஒன்றிய அரசு ஆய்வுக்குழு ஒன்றை அமைத்து, மத்திய வக்பு சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என இக் கூட்டம் ஒன்றிய அரசை கேட்டுக்கொள்கிறது.
https://facebook.com/story.php?story_fbid=pfbid027bfs8Qna4ofBMasdSNUi79mLEEf8SYdBjzkSbDhcRY1jtvuiFhZMumqvmQ1SqRdPl&id=100063578533313&mibextid=Nif5oz
8. NIA சட்டத்தில் திருத்தம் தேவை
ஒன்றிய அரசின் தேசிய புலனாய்வு முகமை (NIA) என்பது மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதுடன் , கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிராக இருக்கிறது .
சம்மந்தப்பட்ட மாநில முதல்வர்களின கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகு, மாநில காவல் துறையின் ஒத்துழைப்புடன் மட்டுமே சோதனைகளை நடத்த வேண்டும்.
இது தொடர்பான சட்டத்தில் இத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
9. UAPA சட்டத்தை திரும்ப பெறுக.
மனித உரிமை மீறல்களையும், கொடும் அடக்குமுறைகளையும் வெளிப்படுத்தி வரும் UAPA சட்டத்தை அமல்படுத்துவதை கைவிட வேண்டும் என ஒன்றிய அரசை கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
10. ஒன்றியஅரசின் பணிகளில் இட ஒதுக்கீடு..
நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைப்படி ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என இக்கூட்டம் ஒன்றிய அரசை கேட்டுக் கொள்கிறது.
11. நெய்வேலி என்எல்சி நிறுவனம் தொடர்பாக...
நெய்வேலி NLC நிறுவனத்தின் விரிவாக்க பணிகளுக்கு 25 ஆயிரம் ஏக்கர் வேளாண் நிலங்களை கையகப்படுத்துவதை அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.
எனவே NLC நிறுவனம் இம்முயற்சியை கைவிட வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
மேலும் வீராணம் பாசன பகுதிகளை, நிலக்கரி எடுக்க ஆய்வு செய்வதற்கு மாநில அரசு அனுமதி அளித்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது..
12. தமிழக காவல்துறைக்கு பாராட்டு
சமீப வருடங்களாக அதிகரித்து வரும் சட்ட விரோத போதை பொருள் பயன்பாட்டிற்கு எதிராக, தமிழக காவல்துறை எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளுக்கு கூட்டம் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.
வளரும் தலைமுறையை பாதுகாக்க, தமிழக காவல்துறையோடு இவ்விஷயத்தில் பொதுமக்களும், சமூக இயக்கங்களும் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்றும் இக்கூட்டம் அனைவரையும் கேட்டுக்கொள்கிறது.
13.. கலைஞர் பெயரில் வேளாண் கல்லூரி
திருவாரூரில் முன்னாள் முதல்வர் டாகடர் திரு. கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் பெயரில் வேளாண் பல்கலைக்கழகம் ஒன்றை தமிழக அரசு அமைத்திட வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
14. VP. சிங் பெயரில் பல்கலைக்கழகம்.
பெரியாரின் சமூக நீதி கொள்கைகளுக்கு ஆதரவாக செயல்பட்டதுடன், தமிழக மக்களின் மீது பேரன்பை காட்டிய முன்னாள் இந்திய பிரதமர் VP.சிங் அவர்களின் பெயரால், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டங்களை முன் மாதிரியாக கொண்டு ஒரு பல்கலை கழகத்தை அமைத்திட தமிழக அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
15. மேகதாது அணை கட்டுமானத்தை தடுத்து நிறுத்துக...
கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் சட்ட விரோதமாக அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகா அரசின் நடவடிக்கை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானதாகும் .
மேதகு குடியரசு தலைவர் அவர்கள் இதில் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
16. வட்டியில்லா வங்கி
உலகமெங்கும் வட்டியில்லா வங்கி சேவை முறைகள் வளர்ந்து வருகின்றன.
இதை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு இந்தியாவிலும் இச்சேவையை வழங்கிட இந்திய ரிசர்வ் வங்கிக்கு அனுமதி வழங்க வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
17. நதிகளை தேசிய மாக்கல்
இந்தியாவில் ஓடக்கூடிய நதிகள் புவியியல் வாய்ப்புகளுக்கு ஏற்ப இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வழுத்து வருகிறது.
அதன் முதல் கட்டமாக ஒன்றிய அரசு அனைத்து நதிகளையும் தேசியமயமாக்கிட வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
18. தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவன அலுவலகம்.
சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய வேளாண் பயிர் காப்பீட்டு நிறுவனத்தின் நிர்வாக அலுவலகத்தை தமிழகத்தின் பெரும் விளைநில பகுதியாக விளங்கும் டெல்டா மண்டலத்தில், தஞ்சாவூர் நகரத்தில் அமைத்திட ஒன்றிய அரசின் மூலம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
19. மீனவர்கள் நலன்
இந்திய - இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களின் மீது இலங்கை ராணுவம் தொடர்ந்து நடத்தும் துப்பாக்கிச் சூடுகளும் இதர வகை தாக்குதல்களும் தமிழக மீனவர்களிடம் பேரச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விஷயத்தில் இந்திய வெளியுறவுத்துறை, இலங்கை தூதரை நேரில் அழைத்து கண்டிப்பதுடன் சர்வதேச ரீதியிலான சட்டங்கள் மூலம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது .
20. அதானி நிறுவன முறைகேடு
இந்திய பெரு முதலாளிகளில் முன்னிலையில் இருக்கும் அதானியின் நிறுவனம் செய்த முறைகேடுகளால், இந்திய வங்கி சேவைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது . இது குறித்து எதிர் கட்சிகளும் , பொருளாதார வல்லுநர்களும் வலியுறுத்தியும் பிரதமரும் , ஒன்றிய அரசும் இவ்விசயத்தை கவனக்குறைவாக அணுகுவது நாட்டு மக்களிடம் கவலையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே அதானி நிறுவனத்தின் மோசடிகளை- முறைகேடுகளை கண்டறிய பணியிலிருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் ஒரு விசாரணை குழுவை ஒன்றிய அரசு அமைக்க வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
21. ராகுல் காந்திக்கு பாராட்டு..
இந்திய ஒற்றுமை யாத்திரை (பாரத் ஜோடா) என்ற பெயரில் 150 நாட்களில் 4000 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு ஜனநாயக சக்திகளுக்கும், நாட்டு மக்களுக்கும் பெரும் நம்பிக்கையூட்டி இருக்கும் காங்கிரசின் முதன்மை ஆளுமையான திரு ராகுல் காந்தி MP., அவர்களுக்கு இக்கூட்டம் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது.
22. வன விலங்கு தாக்குதல்கள் தொடர்பாக
கடந்த பத்து ஆண்டுகளாக நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும், மக்கள் வசிக்கும் இடங்களிலும் , விவசாய நிலங்களிலும் , வன விலங்குகளின், குறிப்பாக யானை மற்றும் புலிகளின் தாக்குதல்களால் சுமார் 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் .
வனத்துறை உயர் அதிகாரிகள் இதை தடுப்பதற்கான முயற்சிகளை செய்யாமல், மக்களை அங்கிருந்து வெளியேற்ற முயற்சிக்கிறார்கள் .
மக்கள் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு இதற்கு உரிய நடவடிக்கைகளை செய்திட வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
23. துருக்கி - சிரியா மக்களுக்கு இரங்கல்.
சமீபத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பூகம்பத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கின்றனர்.
அவர்கள் அனைவருக்கும் இக் கூட்டம் இரங்கலையும் , அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த துயரத்தின்போது மீட்பு பணிகளில் ஈடுபட்ட இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கும் , தொண்டு அமைப்புகளுக்கும் இக் கூட்டம் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.
24.பரந்தூர் விமான நிலைய விவகாரம்.
சென்னை அருகே பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள் . அவர்களது கோரிக்கைகளை ஒன்றிய அரசும் தமிழக அரசும் பரிசீலிக்க வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
25.தஞ்சை - புதுக்கோட்டை ரயில் தடம்...
தஞ்சை மற்றும் புதுக்கோட்டைக்கு இடையே ரயில் தடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக வைக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2012 - 2013 ஆம் ஆண்டில் ரயில்வே பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பும் வெளியானது .
ஒன்றிய அரசு தாமதிக்காமல் இதற்கான நிதியை ஒதுக்கி இதற்கான பணியை செய்து தர இக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
ஆகிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது..
அரங்கிற்கு வெளியேயும் பந்தல்கள் அமைக்கப்பட்டு அங்கும் திரளானோர் கூடியிருந்தனர்.
மருத்துவ முகாம், புத்தக அரங்கு, புகைப்பட கண்காட்சி, மாணவர் இந்தியா அரங்குகள் தொடர்ந்து கூட்ட நெரிசலோடு பரபரப்பாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags: செய்திகள்