Breaking News

தாழ்த்தப் பட்ட மக்களின் எழுச்சி நாயகர் அம்பேத்கர்!. (டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்.(ஓ)

நிர்வாகி
0

 


நாளை சித்திரை முதல் நாள், தமிழ் மக்கள் கொண்டாடும் சித்திரை திருவிழாவிற்கு ஆரம்பம் நாள். அத்தோடு அனைவராலும் அண்ணல் என்று புகழைப் பட்ட அம்பேத்கர் பிறந்த நாளாகும். அவருக்கு மாலை போடுபவர்களுக்கு அவர் ஏன் ‘அண்ணல்’ என்று அழைக்கப் படுகிறார் என்று கேட்டால் இந்திய அரசியல் சட்டத்திற்கு தலைமையேற்றவர் என்று மட்டும் கூறுவார்கள். ஆனால் அவர் இந்திய ஜாதியக் கொடுமையினை காலில் போட்டு மிதித்துவிட்டு பீனிக்ஸ் பறவையாக உயர்ந்தவர் என்று பலருக்கும் தெரியாது.

‘ஜாதிகள் இல்லையடி பாப்பா,உயர் தாழ்வு உயர்வு சொல்வது பாவம்’ என்றார் சுப்ரமணிய பாரதி. அந்த ஜாதிய கொடுமைகளை வேரறுக்க சட்டத்தின் மூலம் அடித்தளம் அமைத்தவர் அண்ணல் அம்பேத்கர். 14.04.1891 அன்று பிறந்தவர். அவருடைய தந்தை ராம்ஜி காரெகோன் ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றினார். அவர் ‘மகர்’ என்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய, தீண்டத்தகாத இனத்தில் பிரிவில் பிறந்தவர். ராம்ஜிக்கு இரண்டு மகன்கள். அதில் இளையவர் அம்பேத்கர் ஆகும். 1901 ம் ஆண்டு அவர்களுக்கு ராம்ஜி ஒரு கடிதம் எழுதியிருந்தார். தந்தை வேலை பார்க்கும் இடத்திற்கு கோடை விடுமுறை கழிக்க வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். அதனை அறிந்த அம்பேத்கரும், அவருடைய சிறு வயது அண்ணனும் ‘சட்டாரா’ ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறி ‘மசூர்’ வந்திறங்கினர். அவர்களின் தந்தை வேலை காரணமாக ரயில் நிலையம் வரவில்லை. அங்கிருந்து தந்தை வேலை பார்க்கும் இடத்திற்குச் செல்ல வேண்டுமென்றால் மாட்டு வண்டியில் தான் செல்ல வேண்டும். ஆகவே சிறுவர் இருவரும் ஒரு மாட்டு வண்டியை  வாடகைக்கு அமர்த்த முயன்றனர். ஒரு மாட்டு வண்டி உரிமையாளர் அந்த சிறுவர்கள் கீழ் ஜாதி என்று தெரிந்து அவர் வர மறுத்து விட்டார். அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்கும்போது, ஒரு நல்ல மனம் கொண்ட ரயில் நிலைய மேலாளர் வேறொரு மாட்டு வண்டி ஓட்டுனரிடம் அந்த சிறுவர்கள் பரிதாப நிலையினை எடுத்து கூறி அவர்களை தந்தை வேலை பார்க்கும் இடத்திற்கு அழைத்துச்செல்லுமாறு வேண்டினார். சிறிது தயக்கத்திற்குப் பின்பு அந்த மாட்டு வண்டிக்காரர், 'என் வண்டியில் அவர்கள் வரலாம், ஆனால் அவர்கள் தான் ஓட்ட வேண்டும், நான் அவர்கள் பக்கத்தில் உட்கார மாட்டேன், வாடகையும் அதிகம் வேண்டுமென்றார்’. அதற்கு அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். வண்டி புறப்பட்டடது. வண்டி உரிமையாளர் அவர்கள் தீண்டத்தகாதவர் ஆனதால் அவர்கள் பக்கத்தில் உட்காராது வண்டிக்குப் பின்னால் நடந்து வந்தார்.

போகும் வழியில் அந்த சிறுவர்களுக்கு பசி எடுத்தது, ஆகையால் அவர்கள் கொண்டு வந்த உணவை தின்றார்கள். தாகம் தீர்க்க வழி நெடுக தண்ணீர் கேட்டார்கள் ஆனால் யாரும் கொடுக்க வில்லை. அதே போன்று அம்பேத்கர் படித்த பள்ளியில் அவரை மற்ற பிள்ளைகளுடன் அமர அனுமதிக்க வில்லை. அவருக்கு உட்கார ஒரு சாக்குப் பை கொடுத்தார்கள். அதேபோன்று பள்ளி தண்ணீர் தொட்டியில் அவரை தாகம் தீர்க்க விட வில்லை. மாறாக பள்ளி காவலாளி  உயரத்தில் நின்று கொண்டு ஒரு குவளையில் தண்ணீர் எடுத்து அம்பேத்கரை கையில் ஏந்தி தண்ணீர் குடிக்க வைத்தாராம். ஏதாவது ஒரு நாள் காவலாளி அலுவளுக்கு வரவில்லையென்றால் அம்பேத்கர் தாகத்தினை அடக்கிக் கொள்ள வேண்டுமாம். மற்ற மாணவர்களுக்கு ‘சமஸ்க்ரிதம்’ போதனை செய்தால் அவருக்கு மறுக்கப் பட்டதாம். மேற்கொண்ட சமுதாய கொடுமைகள் கண்டு மனம் வெதும்பி நாமும் மற்றவர்களுக்கு மேல் சமுதாயத்தில் உயர வேண்டும் என்று உறுதிமொழி எடுத்து படிக்க தொடங்கினாராம். வகுப்பில் முதல் மாணவராகி, இங்கிலாந்தில் மேல் படிப்பிற்கு இலவச சலுகை பெற்று உயர்ந்த பொருளாதார பட்டம் பெற்றார், அத்துடன் கொலம்பியா பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி டாக்டர் பட்டமும் பெற்றார். பின்பு லண்டனில் பாரிஸ்டர் சட்டம் பட்டமும் பெற்றார். எந்த சமுதாயம் அவரை ஒதுக்கியதோ அதே சமுதாயத்தில் உள்ள புரையோடிய ஜாதிய முறையினை ஒழித்து பின் தங்கிய, தாழ்த்தப் பட்ட மக்களுக்கு சலுகைகள் செய்ய வேண்டும் என்ற வைராக்கியம் கொண்டார். இந்தியா சுதந்திரமடைந்த பின்பு 1950 அரசியலமைப்பு சபையின் தலைவராகி முதன் முதல் சட்ட மற்றும் நீதி அமைச்சரானார். ஆகவேதான் இன்றும் சென்னை உயர் நீதி மன்ற வளாகத்தில் அண்ணல் அம்பேத்கர் ஆளுயர சிலை உள்ளது. அதனால் தான் அவர் பிறந்த நாளை சிறப்பாக இந்தியா முழுவதும் கொண்டாடப் படுகிறது.

Tags: கட்டுரை

Share this