Breaking News

ஒவ்வொன்றுக்கும் சில நிபந்தனைகள் இருக்கின்றன....

நிர்வாகி
0

 


இஸ்லாத்திற்க்கு எதிரான கருத்துக்களை கொண்ட விஸ்வரூபம், துப்பாக்கி போன்ற  திரைப்படங்கள் வெளி வந்த போது இஸ்லாமிய இயக்கங்களின் தீவிர எதிர்ப்புகளினாலும், அப்போதைய முதலமைச்சரான ஜெயலலிதாவின் அதிகாரத்தினாலும் அத்திரைப்படங்களில்  சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு திரையிடப்பட்டன. 


தற்போது புர்கா, ஃபர்ஹானா போன்ற திரைப்படங்களில் இஸ்லாமியக் கொள்கைகளையும், இஸ்லாமியர்களையும் தவறாகச் சித்தரித்து இருப்பதால் தமிழக இஸ்லாமியர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


 தமிழ் திரைத்துறையில் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துகள் முளைக்கும் போதெல்லாம் அனைத்து விரல்களும் திரைப்படங்களை ஹராமென்று ஆலிம்கள் கூறிவிட்டனர் என்று ஆலிகளின் பக்கம் மட்டுமே  நீளுகிறது... இது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை? 


  இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்கள் திரைப்படங்களில் எழும்போதெல்லாம் ஆலிம்கள் திரைப்படங்களை ஹராம் என்றதினால் இஸ்லாமியர்கள் திரைப்படங்களில் கவனம் செலுத்துவதில்லை. இதனால்தான் இஸ்லாத்திற்கு எதிரான திரைப்படங்கள் அணிவகுத்து வருகின்றன என்ற அவசியமற்ற கருத்துகளை சிலர் முன்வைக்கின்றனர்.


சினிமாவை   ஆலிம்கள்  ஹராமென்று ஃபத்வா வழங்கினார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.. அதற்கான காரணங்கள் என்னவென்று உங்கள் அருகில் இருக்கும் ஆலிம்களை நேரடியாக அணுகி விளக்கம் கேட்டுக்கொள்ளுங்கள்.


ராஜ்கிரண்,அமீர், நாசர், யுவன் சங்கர் ராஜா,ரகுமான்,  இசையமைப்பாளர் A.R.ரஹ்மான் இவர்களின்றி எங்கே தான் இஸ்லாமியன் என்ற விபரம் வெளியுலகிற்குத் தெரியவந்தால் பட வாய்ப்புகள் குறைந்துவிடும் என்ற நோக்கில் பெயர் முதல் கொண்டு  தன் இஸ்லாமிய அடையாளங்களை  துறந்து பலரும் தமிழ் திரையுலகிலும், மலையாள திரையுலகிலும் கணிசமான இஸ்லாமியர்கள் இருக்கின்றனர். இதைப்போன்று, கான்களின் ஆதிக்கம்தான் இந்தி திரையுலகில் ஆளுமைச் செய்கின்றது .


இவர்கள் யாரேனும் இஸ்லாமிய வாழுவுமுறைகளைப் படமாகக் காட்சிப்படுத்த என்றேனும் முயன்றது உண்டா ?  அல்லது இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு எதிராக வரும் திரைப்படங்களுக்கு இவர்களின் எதிர்ப்புகள் பதிவாகி இருக்கின்றனவா ?


திரைத்துறையில் இஸ்லாமியர்கள் சென்றால் எல்லாம் மாறும் என்பதெல்லாம் பொருளற்ற பேச்சாகக் கருதுகிறேன். திரைத்துறை பொருத்தவரை பணம் மட்டுமே பிரதானம் என்பது உங்களுக்கு தெரியும் தானே ? இஸ்லாமியக் கொள்கைகளை நேரடியாக விமர்சனம் செய்யும் திரைப்படங்களில்  இஸ்லாமியர்களின் பங்கு இல்லாமலா இருக்கிறது‌? ரோஜா, பம்பாய் போன்ற இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் படங்களுக்கு இசையமைத்த ரஹ்மானை நோக்கி உங்கள் விரல் என்றேனும் நீண்டுள்ளதா ? 


முஸ்லீம்கள் என்றாலே உருது கலந்த தமிழ் மொழி பேசுவார்கள் தெளிவான தமிழ் மொழி பேசமாட்டார்கள் என்ற செய்தியை மக்கள் மன்றத்தில் பதியச் செய்யும் சினிமாத் தனத்திற்கு எதிராக திரைத்துறையில் இருக்கும் எத்தனை இஸ்லாமியர்கள் குரல் எழுப்பி உள்ளனர்?  இதை  நீங்களே உங்கள் மனதுக்குள் கேள்வியாக எழுப்பிக் கொள்ளுங்களேன்.


ஏதோ சில காரணங்களை கூறி பணம் சம்பாதிக்க மௌனம் காக்கும் திரைத்துறையில் இருக்கும் இஸ்லாமியர்களை கேள்வி கேட்காமல் ஆலிம்களை மட்டும் உங்கள் எழுத்தம்புகள் குறிவைப்பது ஏன்? 


மார்கத்தில் ஒன்றை கூடும் என்பதற்கு பல நிபந்தனைகள் இருக்கின்றன.கூடாது என்பதற்கும் பல நிபந்தனைகள் இருக்கின்றன.. என்பதை மனதில் வையுங்கள்..


இவர்களைப் பற்றி பேசினாலோ அல்லது கேள்வி கேட்டாலோ பதில் வேறுமாதிரி வரும் என்பதால் ஆலிம்களுக்கு எதிராக  மட்டுமே உங்கள் கருத்துக்கள் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது..!


இஸ்லாத்திறகு எதிரானப் பிரச்சாரங்கள் இன்று எழுந்த ஒன்றல்ல காலம் காலமாக இருக்கின்றன.   


முகநூலில் ஆலிம்களை விமர்சனம் செய்வதை விட்டுவிட்டு பொதுவாக யோசியுங்களேன்.


A. H. யாசிர் ஹசனி

01/05/2023

Tags: கட்டுரை

Share this