Breaking News

எஸ்.டி.பி.ஐ கட்சியின் 2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்ச்சுடர் விருதுகள் பெறும் ஆளுமைகள் அறிவிப்பு ..!

நிர்வாகி
0

 


இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;


எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக சமூகத்தில் பல்வேறு தளங்களில் மக்களுக்கு சேவையாற்றக்கூடிய சிறந்த ஆளுமைகளை கௌரவிக்கும் விதத்திலும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் உரியவர்களை தேர்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுமைகளுக்கு தலைவர்களின் பெயரால் தமிழ்ச்சுடர் விருதுகள் வழங்கி எஸ்.டி.பி.ஐ. கட்சி கெளரவித்து வருகின்றது.


அதன்படி, சிறந்த பொதுநல மக்கள் பணிக்காக கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் விருதும், சிறந்த மனித உரிமை களப்பணிக்காக தந்தை பெரியார் விருதும், ஒடுக்கப்பட்டோர் நலன் உழைப்பிற்காக டாக்டர் அம்பேத்கர் விருதும், சிறந்த கல்விச் சேவைக்காக பெருந்தலைவர் காமராசர் விருதும், தமிழ் இலக்கியம் மற்றும் சிறந்த எழுத்து ஆளுமைக்காக கவிக்கோ விருதும், சிறந்த சுற்றுச்சூழல் செயல்பாட்டிற்காக ஐயா நம்மாழ்வார் விருதும், சிறந்த சமூக சேவைக்காக அன்னை தெரசா விருதும், பாசிச மற்றும் மதவெறி சக்திகள் எதிர்ப்பு களத்தில் பழனிபாபா விருதும் வழங்கி வருகின்றது. மேலும், இந்த ஆண்டு முதல் ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் அரசியல் எழுச்சிக்காகவும், சமூக நீதிக்காகவும் தன்னை அர்ப்பணித்து களம் கண்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் மறைந்த சயீத் சாஹிப் அவர்களின் பெயராலும் விருது வழங்கப்படவிருக்கிறது. 

அதன்படி இந்த ஆண்டுக்கான (2023) விருதுகளை பெறும் ஆளுமைகளை தேர்ந்தெடுக்க விருது கமிட்டி குழு அமைக்கப்பட்டது. பல்வேறு பரிந்துரைகளின் அடிப்படையில், அந்த குழு பின்வருபவர்களை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் விருதுக்காக தேர்வு செய்துள்ளது.


விருது பெறும் ஆளுமைகள்:


1. கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் விருது : திரு. T.K.S. இளங்கோவன் EX M.Pஅவர்கள், தலைமைக் கழகச் செய்தி தொடர்புக்குழு தலைவர், திமுக.


2. தந்தை பெரியார் விருது  :  இயக்குநர் திரு.வெற்றிமாறன் அவர்கள், திரைப்பட இயக்குநர்


3. டாக்டர் அம்பேத்கர் விருது   :  வழக்கறிஞர் திரு. நாகை திருவள்ளுவன் அவர்கள், தலைவர், தமிழ்ப்புலிகள் கட்சி


4. பெருந்தலைவர் காமராசர் விருது  :  பேராசிரியர் லெ.ஜவஹர் நேசன் அவர்கள், முன்னாள் துணைவேந்தர் மைசூர் பல்கலை/கல்வியாளர்


5. பழனிபாபா விருது   :  திரு. தி.வேல் முருகன் M.L.A. அவர்கள், தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி 


6. கவிக்கோ விருது:  திரு.J.M.சாலி அவர்கள், மூத்த எழுத்தாளர், சிங்கப்பூர்


7. ஐயா நம்மாழ்வார் விருது  :  திரு.முகம்மது அலி அவர்கள்,  காட்டுயிர் ஆர்வலர், மேட்டுப்பாளையம்


8. அன்னை தெரசா விருது :  திரு.அலி பாஷா அவர்கள், சமூக சேவகர், திருவொற்றியூர்


9. சயீத் சாஹிப் விருது  :  டாக்டர் திரு.ஆ.சே.மு. ஷேக் மீரான் அவர்கள், மூத்த களப்போராளி, வேலூர் 


எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தமிழ்ச்சுடர் விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த ஆளுமைகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஆளுமைகளுக்கு எதிர்வரும் ஜூன் 24 அன்று, சென்னை, பிராட்வே ஹயாத் மஹாலில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags: செய்திகள்

Share this