பொது சிவில் சட்டம்: 2024 பொதுத் தேர்தலுக்காக மக்களை பிளவுப்படுத்தும் மோடியின் அணுகுண்டு! ஆயங்குடி மு.இ.நஸீருத்தீன்
பாரதிய ஜனதா என்ற கட்சி தொடங்கப்படுவதற்கு முன்பே, அதன் தாய் அமைப்பான ஜனசங்கம் காலத்திலிருந்தே - பொது சிவில் சட்டம் சங்பரிவார்களின் கோட்பாடாகவும், கோரிக்கையாகவுமே இருந்திருக்கிறது.
முஸ்லீம்களின் மத அடிப்படை நம்பிக்கையில் அரசு தலையிடுவதாக அவர்கள் உணர்தால் - பார் போற்றும் இந்தியாவின் சமூக கட்டமைப்பில் சேதம் ஏற்படும் என அஞ்சிய வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு, அச்சட்டத்தை அமல்படுத்த முயலவில்லை. மோடியில் முதல் ஐந்தாண்டு ஆட்சியில் கூட இது குறித்து அங்கொன்றும், இங்கொன்றுமாக பேச்சுக்கள் எழுந்தாலும், அது குறித்த அரசின் அடாவடியான செயல்பாடுகள் எதுவும் இருந்ததாக தெரியவில்லை. ஆனால், இம்முறை, அதுவும் தேர்தல் நெருங்கும் இவ்வேலையில், அது பற்றியெல்லாம் பிரதமருக்கு அறவே கவலையில்லை.
பொது சிவில் சட்டம் என்பதை சனாதன அடைப்படைவாதிகளையும், ஜனநாய சக்திகளையும் ஓட்டு அரசியலுக்காக பிளவுப்படுத்தும் அணுகுண்டாக மோடி பார்க்கிறார்.
அரசியலமைப்பு சட்டம் வகுக்கப்பட்ட போது, ஜவஹர்லால் நேரு, அண்ணல் பி.ஆர். அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள், இந்திய தேசம் பலதரப்பட்ட மக்களுக்கான ஒரு தேசமான தொடர வேண்டுமானால் எல்லோருக்குமான பொது சிவில் சட்டமாக வடிவமைக்க வேண்டும் என தொடக்கத்தில் கருதினர்.
ஆனால், அந்த எண்ணத்தை அந்த குழுவில் இருந்த மற்ற சில அடிப்படைவாத இந்து உறுப்பினர்களே எதிர்த்தனர். உதாரணமாக - பிந்தைய காலத்தில், குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், 1955ல் ஒழிக்கப்பட்ட இந்துகளின் பலராத மண சட்டத்தை எதிர்த்தோர், அப்போதும் தீவிரமாக எதிர்த்தனர். இது இந்து மதத்தின் அமைப்புகளையே, அல்லது அதன் நடைமுறைகளில் அரசு தலையிடுவதாக எதிர்த்தனர்.
முஸ்லிம் தனியார் (ஷரீஅத்) விண்ணப்ப சட்டம் (1937) ரத்து செய்யப்பட்டால் - பிரிவினையின் போது இந்தியாவை தேர்ந்தெடுத்த மரபுவழி முஸ்லீம்கள் தங்கள் மத அடையாளத்தை இழக்க நேரிடும் என்ற பாகிஸ்தானின் கூற்றுக்கு வலுசேர்க்கும் என்பதால் - மேற்குறிப்பிட்ட முஸ்லீம்களுக்கான தனியார் சட்டம் தொடர வேண்டும் எனவும் பலர் வாதிட்டனர். இந்த வாதத்தை நேருவும், அம்பேத்கரும் கூட ஏற்றுக்கொண்டனர்.
இந்தியாவில் ஒரே குற்றவியல் சட்டம் இருக்கும். ஆனால் தனிநபர் விஷயங்களில், அதாவது - திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, வாரிசுரிமை போன்றவை மத சட்டங்களுக்கு உட்பட்ட, தனியார் சட்டமாக இருக்கும். ஒரே மாதிரியான சிவில் சட்டம் தேவையில்லை என முடிவுசெய்தனர். பொதுசிவில் சட்டம் என்பதை அந்தந்த மாநிலத்தின் கொள்கை மற்றும் வழிகாட்டும் கோட்பாடுகளின் (Principles of State Policy)ன் கீழ் சேர்க்கப்பட்டது.
அப்போதிலுருந்து - பொது சிவில் சட்டம் குறித்த விவாதம் ஓட்டு அரசியலுகாக மட்டுமே அவ்வபோது எழுந்துவந்தது அல்லது குறிப்பிட்ட சுயநல மலிவான அரசியல் பரிவாரங்களால் எழுப்பப்பட்டு வந்தது.
பொது சிவில் சட்டத்திற்கான ஆதரவும், எதிர்ப்பும்!
முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ், அம்மத பெண்களின் நிலைமை, மற்ற மதத்தை சேர்ந்தவர்களை காட்டிலும் மோசமாக இருக்கிறது என்ற பிம்பம் கட்டியமைக்கப்படுகிறது. 1980களில் ஷாபானு வழக்கின் தீர்ப்புக்கு பின், தூண்டுதலின் பிண்ணனியில் போலி பெண்ணியம் பேசும் சில பெயர்தாங்கி முஸ்லிம்களின் போராட்டங்களுக்கு பின், தனிநபர் சட்டம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற வாதம் தீவிரமடைந்தது. இதில் விந்தை என்னவென்றால், பதின்பருவத்திலேயே மனைவியை கைவிட்ட தலைவர்களை கொண்ட கட்சி, இதுகுறித்து தீவிரமாக பேசுவது தான்.
முஸ்லீம்களை பழமைவாதிகளாகவும், அவர்கள் பரவலாக ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் செய்துக் கொள்வதற்கும், தங்கள் இல்ல பெண்களை தவறாக நடத்துவதற்கும் அவர்களின் தனிநபர் சட்டத்தில் அனுமதியளிக்கப்படுகிறது எனவும் இந்துத்துவ வகுப்புவாதிகளால் பிரச்சாரம் செய்யப்படுகிறது.
ஆனால், 1955 ஆம் ஆண்டு இந்துக்களின் பலதார மண உரிமை சட்டம் பறிக்கப்படுவதற்கு முன் - இந்துக்களை காட்டிலும் முஸ்லிம்களில் மிகமிக குறைவானவர்களே பலதார மணம் புரிந்தவர்கள் என புள்ளிவிவரங்கள் சொல்கிறது. அப்போதெல்லாம் பலதார மணமுறை பழமையானதாக பேசப்படவில்லை. மாறாக, அது இந்துத்துவ மனப்பான்மையால் ஆராதிக்கப்பட்டது.
பொது சிவில் சட்டம் வேண்டும் என்போர் வைக்கும் இன்னொரு வாதம் - வளர்ந்த மேற்கத்திய நாடுகளில் எல்லோருக்கும் ஒரே சட்டம் தான் பின்பற்றபடுகிறது என்பதாகும்.
உண்மையில், மேற்கத்திய நாடுகளின் வாழ்வியல் முறை, நம் இந்திய தீபகர்ப்பத்தின் வாழ்வியல் முறைக்கு முற்றிலும் மாறானாது. உதாரணத்திற்கு வேறெங்கும் போகாமல் - நம் பிரதமரின் தனிப்பட்ட திருமண வாழ்க்கையையே எடுத்துக்கொண்டாலும் - கைகள் கடுக்க எழுதலாம்.
தனது பதின்பருவத்திலேயே மோடியால் கைவிடப்பட்ட ஜஷோதா பென் இன்றுவரை எப்படி வாழ்கிறார் என்பதும், இப்படியான நிலை ஒரு ஐரோப்பிய பதின்பருவ பெண்ணிற்கு ஏற்பட்டிருந்தால், எப்படியாக இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
நான் நம் தீபகர்ப்ப வாழ்வியல் முறை என மேலே குறிப்பிட்டதற்கும் காரணம் இருக்கிறது. அது, பழமைவாதமும், சகிப்புத்தனனையும் அற்றவர்கள் மட்டுமே நிறைந்திருக்கும் நாடாக காட்சிபடுத்தப்படும் நம் சண்டை நாடான பாகிஸ்தானில் இந்துகளுக்கு மட்டுமான இருவேறு தனியார் சட்டங்கள் இன்றளவும் நடைமுறையில் இருக்கிறது.
இன்னொரு அண்டை நாடான வங்காலதேசம். அங்கும் இந்துக்கான தனியார் சட்டம் நடைமுறையில் உள்ளது. முஸ்லிம்கள் நிறைந்துவாழும் அங்கு முஸ்லிம்களுக்கே பலதார மணத்திற்கு அனுமதியில்லை என்ற போதும், விந்தையாக - அங்கே இந்துக்களுக்கு பலதார மண உரிமை வழங்கபட்டு வருகிறது. இதற்கு அங்கு சிறுபான்மையினராக உள்ள இந்துக்களுக்கும், அதன் வேதங்களுக்கும் மதிப்பளிப்பதாக சிலாகித்துக் கொள்கிறார்கள்.
பௌத்தர்கள் நிறைந்த நம் அண்டை நாடுகளான இலங்கையிலும், மியான்மரிலும் அங்குள்ள இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கான தனியார் சட்டங்கள் இன்றளவும் அமலில் உள்ளது.
அக்கமும், பக்கமும் மதசுதத்திரத்தில் தாராள எண்ணங்கோடு முன்னோக்கி பயனித்துக் கொண்டிருக்கையில், இந்த தீபகர்ப்பத்தின் தனிபெரும் சக்தியாக உருவெடுக்க முழுத் தகுதியும் கொண்ட நம் தேசம், சொந்த மக்களுக்கு மத்தியில் மதத்தின் பெயரால் பிளவுகளையும், பிரளயத்தையும் ஏற்படுத்தும் எதேசதிகார கும்பலிடம் சிக்கி தவிக்கிறது.
மோடியின் 2024 பொதுத் தேர்தலுக்கான அணுகுண்டு!
மோடியின் இந்த ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் வாய்ப்புகள் இருந்தும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து பெரிய சிரத்தைகள் எதுவும் எடுக்காமல் இருந்துவிட்டு, மத்திய பிரதேசத்தில் தேர்தல் நெருங்கும் இவ்வேலையில் போபாலில் இதுகுறித்த விவகாரமாக பேசியிருப்பது அப்பட்டமான அரசியலே அன்றி வேறெதுவும் இல்லை.
மத்திய பிரதேசத்தில் மட்டும் அல்ல, நாடெங்கும் பொது சிவில் சட்டமே முக்கிய விவாதப் பொருளாக உருவெடுத்துவிட்டது. அது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு படலம் எல்லாம் தொடங்கிவிட்டது.
ஒன்றிய பொதுத் தேர்தல் நெருங்கும் வேலையில், பொது சிவில் சட்டம் மசோதாவாக பாராளுமன்ற அவைகளில் முன்வைக்கப்பட்டால் - அதை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கண்டிப்பாக எதிர்க்கும்.
அதே நேரத்துல், அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா கோலம் பூணும்.
தேர்தல் பிரச்சார களத்தில் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கும் கட்சிகளை இந்துவிரோத கட்சிகளாக சித்திரித்தும், தங்களை ராமபிரானுக்கு கோயில் எழுப்பிய இந்துகாவலர்கள் என்றும் இந்துமக்களை தங்கள்பால் அணிதிரட்ட மோடியும், அவர் வகையராக்களும் கடுமையாக முயற்ச்சிப்பர்.
பாவம், சொந்த வாழ்வில் ஒரு பெண்ணின் வாழ்கையையே சீரழித்த மோடியின் உண்மை முகத்தையும், கட்டப்பட்ட ராமர் கோயிலுக்குள் ஜனாதிபதியாகவே இருந்தாலும், திரௌபதி முர்முவுக்கு அனுமதி மறுக்கும் சனாதனத்தின் அசல் வடிவத்தையும் அறியாமல் மக்களில் பெரும்பாலோர் மோடிக்கு மீண்டும் வாக்களிக்க கூடும்.
இந்தியாவின் மீதும், அதன் பன்முகத்தனமையின் மீதும் நம்பிக்கை கொண்ட ஜனநாயக சக்திகள் அம்மக்களை(யும்) அரசியல்படுத்த முயலவேண்டும்.
-ஆயங்குடி மு.இ.நஸீருத்தீன்
Tags: கட்டுரை