மண்டபத்தை விட மைதானங்கள் அவசியமானது ..
ஊரில் சமீபத்திய இளம் வயது மரணங்களைப் பார்க்கம்போது நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. உலகம் முழுவதும் கொரானா தாக்குதலுக்குப் பிறகு இறப்பு வீகிதத்தில் பெரும்பாலும் இளம் வயது மரணங்கள் தான் அதிகம் இருக்கிறது, அதே வீதத்தில் இளம் வயது பெண்களும் இருப்பதுதான் பேரதிர்ச்சியாக உள்ளது. பெரும்பாலும் இறப்பு காரணியின் சவாலாக முன் நிற்க்கிறது இருதயநோய் அல்லது கேன்சர்.
உணவு முறைகள் மற்றும் விளையாட்டு, உடல் உழைப்பு இதில் பெரும்பாலும் மாற்றம் ஏற்பட்டு விட்டது. உடல் வியர்த்து ஓடி விளையாடும் விளையாட்டுகள் குறைந்து விட்டது, Fast food உணவுகளின் வரவு இயற்கை உணவுகள் மறக்கடிக்கப்பட்டது அதுமட்டுமல்ல
திருமண விருந்துகள், திருமணம் முடிந்து விருந்து அழைப்புகள் என்ற பெயரில் ஒரு மாதம் நடக்கும் அக்கப்போர்கள் அதுமட்டுமல்லாமல் விசேச விருந்துகள் எனச் சாப்பிடும் இளைஞர்களுக்கு அதற்க்கான உழைப்போ அல்லது விளையாட்டோ இருத்தல் அவசியம்.
பெண்கள் விசயத்தில் பெரும்பாலும் எலக்ட்ரானிக் வீட்டு உபயோகப்பொருட்கள் வந்து விட்டதால் அவர்கள் வீட்டு வேலைகளில் கடுமையான உடல் பயிற்சி நம்முடைய பாட்டி மார்கள் போல இருப்பதில்லை எனவே அவர்களுக்கு இனி நிச்சயமாக நடை பயிற்சி என்பது அவசியமாக இருக்கிறது, அதற்கு ஊர் நிர்வாகம் எதாவது ஒரு இடத்தில் பூங்காவை உருவாக்கி ஜும்மா சிறப்புச் சொற்பொழிவில் நடைபயிற்ச்சி குறித்து ஒரு மருத்துவரை பேச வைத்துப் பெண்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
உலகம் நவீன மயமாக்குதலுக்குப்பிறகு ஒவ்வொரு ஊரிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் இறைவன் கொடுத்த இயற்கை வளங்களை இழந்து வருகிறோம். இது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நடந்தேருகிறது.
இயற்கை மாசுபாடு நீர், காற்று நிலம் என எல்லா இடத்திலும் மாசுபட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைந்து வருகிறது. பெரும்பாலும் ஊர்களில் மதரசா அல்லது மசூதிகள் அல்லது நகராட்சி நிர்வாகத்தில் இருப்பவார்கள் வாருமானம் ஈட்டக்கூடிய விசயங்களைப்பற்றி மட்டுமே சிந்திக்கிறார்களே தவிர அடுத்தத் தலைமுறை இளைஞர்களை எப்படி உடல் தகுதியான ஆரோக்யமான சமூகத்தை உருவாக்க வேண்டும் நல்ல சிந்தனை உடைய சமூகமாக உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம் அவர்களுக்கு இருப்பதில்லை என்பதுதான் வருத்தமான உண்மை.
இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானங்களை உருவாக்கி கொடுக்க வேண்டும். ஏனென்றால் தற்ப்போதய இளைஞர்கள் பெரும்பாலும் மொபைல் போனில் நேரத்தை செலவழிப்பதால் வலிமையான சமூகம் உருவாவது தடைபட்டு வருகிறது.
மைதானங்களை உருவாக்க வில்லை என்றாலும் இருக்கும் மைதானங்களை விற்று மண்டபங்கள் கட்டி விடாதீர்கள் ஏனென்றால் இளைஞர்ககளை விளையாட்டு மைதானங்களில் இருந்து நீங்கள் அப்புறப்படுத்தினால் அடுத்தத் தலைமுறை இளைஞர்கள் நோன்சான்களாக மட்டுமல்ல தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமைபட்ட ஒரு மோசமான தலைமுறைகள் உருவாக்கி விடும்.
வாய்ப்பும் இடமும் இருந்தால் அவர்களுக்கு விளையாட இன்னுமொரு மைதானத்தையும் பெண்கள் நடைபயிற்ச்சி செல்ல ஒரு பூங்காவையும் உருவாக்கித் தாருங்கள்.
அக்கறையுடன்
B.ரஹமத்துல்லா
Tags: லால்பேட்டை