Breaking News

பந்தயம்....யாசிர் ஹசனி லால்பேட்டை

நிர்வாகி
0

 பந்தயம்



இஸ்லாமியர்கள் வாழும் ஊரது. இங்கு வெற்றிலைக் கொடிகால்களின் கொடிகள் எப்போதும் உறங்காமல் வீசிக்கொண்டிருக்கும். பெண் கொடுப்பது,பெண் எடுப்பதெல்லாம் உள்ளூரில் மட்டும்தான்.  அப்படிதான் அமீருக்கும் பெண் பார்த்து நிச்சயம் செய்யப்பட்டது‌. திருமணத்திற்கான  நாளும் வந்தது. வீட்டிற்கு முன்பு கீற்றுகளால் பந்தலிடப்பட்டிருந்தது . வண்ண விளக்குகளால் அது அலங்காரமும்‌ செய்யப்பட்டிருந்தது. 


அருகிலுள்ள குளத்தில் அரிசிகள் களையப்பட்டன.கருப்பு நிறச் சட்டிகளுக்குக் கீழ்   திணிக்கப்பட்டிருந்த விறகுகளின் தலைப் பகுதிகள் புகையை ஏற்றுமதி செய்துகொண்டிருந்தன. ஒரு சட்டியில் தால் சோறு (இதை மற்ற ஊரில் நெய் சோறு என்று கூறுவது வழக்கம்)ஒரு சட்டியில் கறியாணம் ,தால்ச்சா, தொக்கென கல்யாண விருந்துக்கான மதிய உணவுகள் தயாராகிக் கொண்டிருந்தன. கல்யாண வீட்டில் சமைக்கும் விறகின் புகை மெல்ல,மெல்ல மூச்சு விடத் தயாராகும் சூரியனின் ஒளிக்கற்றைகளைச் சுவாசத்தில் புகுந்து வீதிகளை புகை மண்டலமாக மாற்றியப் போதும்,அமீருக்கு மட்டும் அன்று பிரகாசமாய் தென்பட்டது.


ஆங்காங்கே இடப்பட்ட நாற்காலிகளில் தெருவில் வசிப்பவர்களும், சொந்த பந்தங்களும் அமர்ந்து அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர்.



நிக்காஹ்விற்கான நேரம் நெருங்கியது.  மாப்பிள்ளையை மணவறைக்குத் தயார்ப்படுத்த அமீருக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் நண்பர்கள் ஒன்றுகூடினர் .  அமீருக்கு புது ஆடைகளை அணிவித்தனர்.இரண்டு ரக்காத் ஹாஜத் நஃபில் தொழுதான்.விருப்பமான பிரபலமான நிறுவனத்தின் விலையுயர்ந்த காலணியை அணிந்து கொண்டான். அறையிலிருந்து வெளியே வந்து வீட்டில் கூடியிருந்தவர்களுக்குச் சலாம் கூறினான். வயதில் மூத்தப் பெண்கள் அவனை ஆரத்தழுவி துஆ செய்தனர். பிறகு பந்தலில் அமைக்கப்பட்ட மேடையில் மாலையிட்டு, சொந்தங்கள் படைசூழப் பள்ளிவாசலுக்குச் சென்றான். அங்கு ,நிக்காஹ் முடிந்து மணமகள் வீட்டிற்குச் சென்று வந்தான். விருந்தும் சிறப்பாக முடிந்தது‌.


திருமண முடிந்து  நண்பர்களுடன்  புது மாப்பிள்ளைகள் மூன்று நாட்களுக்கு வீட்டிற்குச் செல்லும் சென்று சாப்பிடுவது ஊர் வழக்கம்..!


அப்படித்தான் அமீரும் மறுநாள் காலை சாப்பிட நண்பர்களை ஒன்று கூட்டினான். "செருப்ப மாத்தி வா இதைப் போட்டு வந்தா ஒளிச்சு வச்சு பணம் கேப்பாங்க  பாத்துக்கோ ...!"என்றான் நண்பன் ஒருவன்." " ஏய் என்கிட்ட அதெல்லாம் நடக்காது . நீயே பாரு அப்படி எடுத்தாக் கூட பணம் கொடுக்க மாட்டேன் ஆனா என் செருப்பு என்கிட்ட வரும்"

 என்றான்..!"


சாப்பிட்டு முடித்து விட்டு வெளியில் வந்தபோது தனது காலணி  காணாமல் போனதைக் கண்டவுடன் நண்பன் நினைவுக்கு வந்தான். புது மாப்பிள்ளையின்  காலணியைப் பெண் வீட்டில் ஒளித்து வைத்துக் கொண்டு அதற்கு ஈடாகப் பணம் கேட்பது பெண்வீட்டில் நிகழும் விளையாட்டுதான் இதுவென்று அவனுக்குள் திகழ் வட்டம் உயிர்த்தெழுந்தது.


பெண் வீட்டு மாடியிலிருந்து சாப்பிட வந்தவர்கள் மீது, தண்ணீர் ஊற்றி விளையாடுவார்களென்ற பயத்தில் நண்பர்கள் விரைவாகச் சென்றுவிட்டனர்.


 பிடித்த நிறுவனத்தில் அவனே தேடிப்பிடித்து வாங்கியது. இருந்தபோதும், பணம் ஏதும் கொடுக்காமல் காலணியைப் பெறத் தீட்டிய திட்டமெல்லாம் தோல்வியில் கரைந்து போய்ன.


தனது புது மனைவியிடம் ஏதோ, ஏதோ காரணம் கூறிப் பார்த்தான் ஏதும் அவனுக்கு கை நீட்டவில்லை .


 இரண்டு நாள் கழிந்தது . " மச்சான் மூவாயிரம் கொடுங்க உங்கச் செருப்பைக் கொடுக்கின்றோம் என்றான் " மனைவியின் தம்பி.....!  பணம் செலுத்தாமல் காலணியைப் பெற்றுவிடலாமென்று அவனின்  அனைத்து ராஜதந்திரங்களும் ஒதுங்கிப் போக, மூவாயிரம் கொடுத்து தனது காலணியை அணிந்த நேரம் அவன் நண்பனைக் கண்டவுடன் இதுப் அன்பின் மேநிலை என்று சிரித்தவாறு சென்றான்.


A.H.யாசிர் ஹசனி

28/11/2023

Tags: சிறுகதை லால்பேட்டை

Share this