Breaking News

ஹஜ்ஜுப் பெருநாள்.... சிறுகதை யாசிர் ஹசனி லால்பேட்டை

நிர்வாகி
0

 



 

    ஒரு மாதம் முன்பே ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாட  வீராணத்தின் காற்றைச் சுவாசிக்கும்  அந்த மாநகரம் தயார்நிலைக்கு வந்துவிடும்.குர்பானிக்காக ஆடுகளை ஒரு சிலர் உள்ளூரிலும்,  ஒரு சிலர் வெளியூர் சந்தைகளிலும் வாங்கி வருவதுமுண்டு. 


 இருள் கொஞ்சம், கொஞ்சமாக நழுவிக்கொண்டிருந்தது.  பகலை ஆக்கிரமிப்புச் செய்ய ஆதவன் ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். அடுத்த மாதம் வரவிற்கும் ஹஜ்ஜுப் பெருநாளில்  குர்பானி கொடுக்க ஆடு வாங்குவதற்கு அமீரும், அவன் நண்பரும் சந்தைக்குச் செல்ல, வீட்டு வாசலில் உறங்கிக் கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை நேர் நிருத்தி,   இருவரும் அமர்ந்துக் கொண்டனர்.  


"போன வருஷம் நான்தான் ஊரிலேயே அதிகமான விலைக்கு ஆடு வாங்கின அதேப் போலே இந்த வருஷமும்  ஊரில் இருப்பவர்களை விட ஒரு ரூபாயாவது ஏ ஆடு அதிகமா இருக்கனும்" என்று உறங்கிக் கொண்டிருந்த வாகனத்தை உதைத்தான் அமீர். 



உதைத்த உதைப்பில் உறக்கம் களைந்து வலியில்  கதறத் தொடங்கியது.வாகனத்தின் கதறலைப் பொருட்படுத்தாமல்  மீஞ்சுருட்டிச் சந்தையை நோக்கி வேகமாகச் செலுத்தினான்.


மகன் ஆசைப்பட்டானென்பதற்காக  அவன் நினைத்ததை விட இருமடங்கு அதிகமான விலையில் உசிலம்பட்டி ஆட்டை‌ வாங்கி திண்ணையில் கட்டிவைத்தான் அமீர்.


 பெரியக் கொம்புகள் கொண்ட ஆட்டை ஆசைப்பட்டப் போதும் பயம் காரணமாகத் தூரமாகவே நின்றான் அமீரின் மகன்.


தனது நண்பர்களுக்கு  ஆட்டைக் காண்பித்தான். மற்ற சிறுவர்களின் கூட்டமும் அதிகமானது‌. 


"டேய்..! நாளைக்கு வயலுக்கு கொண்டு வா சண்டயிடுவோம் சம்மையா இருக்கும் " என்றான் அவன் நண்பர்களில் ஒருவன். 


ஆறு மணிவாக்கில் ஆட்டு மந்தை ஒன்று தெருவில் வந்தது. அதனை வேடிக்கை பார்க்கக் குழந்தைகள் சப்தமிட்டு ஓடினர். 

பெருநாளைக்கு வாங்கிய ஆடுகளை‌ மேய்ப்பதற்கு ஒரு சிலர் முனீரிடம் கொடுப்பதுண்டு. அமீரும் இவரிடம் தான் ஆட்டை ஒப்படைத்துள்ளான். அந்தி நேரத்தில்  கொண்டு வரும் ஆடுகளைப் பார்க்கத்தான் குழந்தைகள் சப்தமிட்டு ஓடினர்.


"ஏய்..! உசிலம்பட்டி ஆட்றா ?"ஆமாடா கொம்பு எத்தாப்பெருசு இருக்குப் பாரு ..! 

"இதான் டா..! சண்டப் போட்டுச்சா..! அந்த ஆடு அங்கேப் போய்‌ விழுந்துச்சி"..!  என்றான்‌ இன்னொருவன். சிறுவர்கள் ஆடுகளைச்  சூழ்ந்துக் கொண்டதால் ஆடுகள் மிரண்டன."ஏய் சும்மா இருக்க மாட்டே?"ன்னு  முனீரின் எச்சரிக்கை ஒலி எதிரொலித்தது..


ஹஜ்ஜூப் பெருநாள் வரும் முன்பே..! ஸ்கூல் தெரு ஆடுகளுடன் அன்றாடம் பெருநாள் கொண்டாடத் துவங்கிவிடும். (இங்கு அமைந்துள்ளக் கல்விச் சாலைதான் முதல் கல்விச்சாலை என்பதால் என்னவோ..! இந்த வீதி "ஸ்கூல் தெரு" என்று இன்று வரை அழைக்கப்படுகிறது.)


மற்ற வீதிகளுக்கு இல்லாத வரலாறு இதற்கு உண்டு. கடந்த காலங்களில் மார்க்கம், அரசியல் சார்ந்த அனைத்து பொதுக்கூட்டங்களும் இங்குத் தான் நடைபெற்றன. இங்கேதான், வெளியூர்,உள்ளூர் ஆட்டு வியாபாரிகள் ஆடுகளை விற்பனை செய்கின்றனர். ஆடுகளை வாங்குவதற்கு பெரும் கூட்டம் இங்கே கூடும்.சந்தைப் போல் காட்சித் தரும் இந்த வீதி.



தனது இருசக்கர வாகனத்திலிருந்து இறங்கி  தலையில் வெண்ணிறத் தொப்பி அணிந்திருந்தான். பைக்கின்‌ இருக்கையில் தனது சிக்கிச் சுருங்கிப் போன‌ லுங்கியின் கீழ் பகுதியைச் சரி செய்து வேடிக்கை பார்க்கும் மக்களோடு கலந்தான். பெருநாளைக்கு ஆடு வாங்கிவிட்டாலும் தன்னைவிட யாராவது விலையுயர்ந்த ஆட்டை வாங்குகின்றார்களா? என்று தினத்தோறும் இங்கே  வேவுப் பார்க்கத் தொடங்கினான் அமீர்


ஆடுகளை விலைப்பேசவும், வேடிக்கைப் பார்க்கவும்  சிலர் வந்துச் சென்றனர். பக்ரீத் காலம் தொடங்கிவிட்டதென்பதை இந்த வீதி அறிவிப்பு செய்வதுப் போலிருந்தது. 

கண்ணில்  படுபவர்களிடமெல்லாம் தான் ஆடுதான் ஊரிலேயே விலை உயர்ந்த ஆடென்று பெருமை பேசிவந்தான்.


மறுநாள்.. காலையில்  பள்ளிக்கூடம் செல்லாமல் ஆடுகளைப்  பார்க்கவும், சண்டையிடவும் சிறுவர்கள் வயல்களில் கூடினர். கிடாகளுக்கு மத்தியில் சண்டை ஏற்படுத்தி அதனை ஒரு சாரார் ரசித்துக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் அலைப்பேசியில் காணொளியாகப் பதிவு செய்துக்கொண்டிருந்தனர். 


மதியம் சிறு தூக்கம் தூங்கிய அமீரின்‌ அம்மா  திண்ணையில் அம்ர்ந்து வேடிக்கைப்  பார்த்துக் கொண்டிருந்தாள். 

ஏ பு? அஸ்ஸலாமலைக்கும் நல்லா இருக்கியா ?  என்றது ஒரு குரல் வெண்மை நிற துப்படி போட்ட அந்தப் பெண்மணி அமீரின் அம்மாவை  நலம் விசாரித்தாள்.



"வலைக்கும்ஸ்ஸலாம் யாருமா ?"

"நா.. தான் பு ..ஃபாத்திமா  மவோ.. " நல்லா இருக்கியா ? அம்மா நல்லா இருக்கா? எப்போவோ பாத்தது.‌!"

"நல்லா இருக்கு.பெருநாக்கு ஏ மாமி மவேன்  கப்பேலேண்டு நேத்து வந்திறுக்குப் பாத்து வறேன்." 

"ஆமாண்டி..! ஓ மாமிகூட சொல்லிட்டுயிருந்துச்சி."

 "வூட்டுக்கு வாமா" " இல்ல பு அம்மா மட்டும் தனியா இருக்கு. புள்ளைங்க பள்ளிக்கூடம் வுட்டு வந்திருக்கும் ஒன்னோர் நாள் வரேன்." "அம்மாக்கு சலாம் சொன்னேன் சொல்லு‌" என்றவுடன் "சரி பு" என்று விடைபெற்றாள்".


வழக்கம் போல் மக்ரிப் தொழுகைக்குப் பிறகு கூடும் பெண்கள் சட்டமன்றத்தில் ஹஜ்ஜூப் பெருநாளிற்கு ஆடைகள் வாங்க எங்குச் செல்வது? என்பதற்கு ஆலோசனைகள் கோரப்பட்டன. "நேத்து ஏ‌ மாமியா வூட்லே திருச்சி ஆணந்தம் போச்சுவோ. ஆஃபர்ல வாங்கிட்டு வந்திருக்கோ."என்றாள் மைமூனா.

"வேணாடி கடலூர் போவோம்" ."ஆமாடி இதுவோ அத்தாக் கூட கடலூர் போக சொல்லுச்சி" என்றாள் மர்யம். இப்படியாக ஆடைகள் எடுக்க நேரமும் ,கடையும் தேர்வுச் செய்து கொண்டிருந்தனர்.


மேய்ச்சலுக்குச் சென்று வரும் ஆடு ,நன்றாக உணவருந்திருக்கிறதா? என்று‌  ஆட்டின் முதுகைப் பிடித்துச் சோதித்தான் அமீர்‌. அவன் கண்ணத்தில் தாடிகள் அறுவடை செய்யாமல் இருப்பது, ஹஜ்ஜுப் பெருநாள் அருகில் வந்துவிட்டதை சுட்டிக்காட்டியது.

குர்பானியின் சட்டங்களை பிட் நோட்டிஸாக  வீடுகள் தோறும் மஹல்லா சார்பில் கொடுக்கப்பட்டன.மாட்டுப்பங்கு வியாபாரம் செய்யக் கூடியவர்கள் விளம்பரம் செய்துக்கொண்டிருந்தனர். 

அவர்களுடன் சேர்ந்து ஒரு சிலர் மாட்டுப் பங்கு வைத்தனர்.


வருடா, வருடம்  குர்பானி கொடுக்கும் அமீரின் நண்பர் தமீம் "ஒரு வருஷம் ஆடு குர்பானி கொடுத்தால் எல்லா வருஷமும் குர்பானி கொடுக்கனுமென்று" யாரோ கூறினார்களாம். அதனால், இந்த வருடமும் கட்டாயம் குர்பானிக் கொடுக்க வேண்டுமென்பதற்காகக் கடனை பெற்று,  ஆடு   வாங்கி வீட்டு வாசலில் கட்டிவைத்தான்.


 வீட்டின் முன்புறம் கட்டிவைக்கப்பட்டுள்ள ஆட்டுக்குப் பருத்தித் கொட்டை , கலப்படத் தீவனங்கள் போன்றவற்றை வைத்தான். மற்ற ஆடுகள் போன்று எளிதில் எதையும் சாப்பிடும் பழக்கமில்லாதது  என்பதால்  கீரைப் போன்ற வகைகளைக்  கயிற்றில் தொங்கவிட்டாறு உணவளித்தான் அமீர்.

பாத்திரம் நிரம்ப தண்ணீர் வைத்தான் அமீரின் மகன். பயமில்லாமல் நெருங்கிப் பழகி வந்தான்.



அவன் விசாரித்தவரை இவனைவிட ஊரில் விலை அதிகமான‌ ஆடை யாரும் வாங்கவில்லை என்பதை அறிந்து மனதில் மகிழ்ச்சி பொங்கியது.


துல் ஹஜ் பிறை ஒன்பதில் அரஃபா நோன்பிற்குத் தயாரிப்பில் ஊரே முழுகிப்போனது.  பலரும் நோன்பிருந்தனர். அனைத்துப் பள்ளிவாசல்களிலும் நோன்பு கஞ்சிகள் காய்ச்சப்பட்டன. 

லால்கான் தோப்பில் அமைந்திருக்கும் பெருநாள் திடல் சரிசெய்யப்பட்டுத் தயார் நிலைக்குக் கொண்டு வரப்பட்டது. நோன்பு திறக்கும் நேரம் நெருங்க, நெருங்கத்  தூக்கம் தொலைத்தது ஊர். 


சமோசா,வடை வாங்க பஜார்,  ரோடு என்று மக்கள் கூட்டம் அலைமோதியது. சமோசா வடை என்றாலே மாமு கடை நினைவில் முந்திவிடும். இங்குச் சமோசா, தேநீர் குடிக்கவே  அலைப் போன்று மக்கள் வருவது வழக்கம்.


உணவகங்கள் வண்ண, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. சிறுவர்கள் தெருக்களில் விளையாடிக் கொண்டிருந்தனர் . அரஃபா நோன்பைத் திறந்துப் பெரிய பள்ளிவாசல் சங்கு ஒலிக்கப் பெருநாள் கொண்டாட்டம் துவங்கியது. புது மாப்பிள்ளைகள், பெண் வீட்டிற்கு புரோட்டாகள் மற்றும் பிரியாணி பொட்டலங்கள் அனுப்பி வைத்தனர்.

ஆடு, மாடுகள் அறுக்கும் குழுக்கள் ஊருக்குள் தஞ்சமடைந்தனர். வீதிகள் தோறும் ஆடுகளின்  சப்தங்கள் காதுகளைத் துளைத்தன. மாட்டுப்பங்குக் கொடுக்கக் கூடியவர்கள்  பங்கு வைத்தவரிகளிடம் , மாடு‌ அறுக்குமிடத்தையும், நேரத்தையும் உறுதிப்படுத்திக் கொண்டனர்‌. ஆட்டோக்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மூச்சிரைக்க அங்குமிங்கும் ஓடின.


குர்பானி கொடுக்காதவர்களின் கூட்டத்தால் சலூன் கடைகள் முழுக்க நிரம்பி வழிந்தது. சிதம்பரம் மெயின் ரோடு, பஜார், தோப்பு மற்றும் வீதிகளில் வாலிபர்கள் திரளாக நின்றனர்.

பள்ளிவாசல்களில் தக்பீர் முழக்கங்கள் முழங்கப்பட்டன. வீடுகளில் பெருநாள் அன்று காலை உணவிற்கானத் தயாரிப்புகள் வேகமெடுத்தன.  

இளங்காலைப் பொழுது கொண்டைச் சேவல் குரலெடுத்துக் கூவத் தொடங்கியது. பறவையினம் சிறகடிக்க வண்டுகள் ரீங்கரிக்கக்  கதிரவனின் மொட்டுகள் வெடிக்கத் தொடங்கியது.


பள்ளிவாசல்களில் மார்க்கப் பிரசங்கம்  செய்துக்கொண்டிருந்தார் இமாம். குளித்துப் புத்தாடை அணிந்து நறுமணமிட்டு பள்ளிவாசலுக்கு ஒவ்வொராக வந்து கொண்டிருந்தனர். தொழுகைக்குப் பிறகு புத்தாடை அணியலாமென்று பழைய ஆடைகளில் வந்தனர் ஒருசிலர். 

அதிகாலை தொழுகை முடித்து, பெருநாள் திடலுக்குச் செல்லும் நேரம், பெருநாள் தொழுகை நேரத்தை நினைவுப்படுத்தினார். பெருநாள் தொழுதுவிட்டு குர்பானி கொடுக்கும் வரை உணவருந்தாமல்  இருப்பது நபிவழியென்பதால் ஒரு சிலர் பட்டினியாக இருந்தனர்.

குர்பானி ஆடுகளை வீட்டிற்கு முன்பு கட்டி விட்டனர். அமீரும் அவ்வாறு செய்தான். 


பள்ளிவாசல்களில் தக்பீர் முழக்கங்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கின. இமாம் மிம்பரில் பயன்படுத்தும் ஆஷா கோலை தோலில் துமந்தபடி இமாம்  நின்று தக்பீர் முழங்க,,,! மஹல்லாவாசிகள் ஒன்றுச் சேர்ந்து லால்கான் தோப்பில் அமைந்திருக்கும் பெருநாள் திடலுக்கு வந்துச் சேர்ந்தனர் ‌இப்படியாக,ஒவ்வொரு இமாமின் தலைமையில் அனைத்து மஹல்லாவாசிகளும் திடலுக்கு வந்தனர்.

ஜாமிஆவின் முதல்வர் இப்ராஹிம் நபி அவர்களின் தியாகத்தைப் பற்றி ஆக்ரோஷமாகப் பேசிக்கொண்டிருந்தார். ஊரில் அமைந்திருக்கும் ஒரு பள்ளிவாசலுக்கு  தண்ணீர் தொட்டி அமைக்கப்  பணம் வேண்டி வாலியில் வசூல் செய்யக்கூறியது அவருக்கு நினைவில் வந்தது. பிறகு, அதற்கான அறிவிப்பு செய்தார். பத்து வாலிபர்கள் வாலிகளைப்  பிடித்துக் கொண்டு மக்களுக்கு மத்தியில் ஏந்த, மக்களும் தர்மமென்றடிப்படையில் வாலிகளைப் பணத்தால் நிரப்பிவைத்தனர்.


லால்கான் தோப்பில் ராட்டினங்கள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்களின் கடைகளிலிருந்து வரும் சப்தங்கள் இமாமை தொந்தரவு செய்தபோதும்  எதையும் பொருட்படுத்தாமல் பேச்சைத் தொடர்ந்தார் இமாம்.  


 பெருமைக்காக ஐம்பதாறியரம் மதிப்புள்ள ஆட்டை குர்பானி கொடுப்பவரைவிட, ‌மனத்தூய்மையுடன் ஐந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆட்டை குர்பானி கொடுப்பவரைத்தான் அல்லாஹ் விரும்புகிறான் என்று பிரசங்கம் செய்துக் கொண்டிருந்தார்.இது, நெரிச்சி முள் தைத்ததுப் போன்று அவனுக்குள் உணர்வு உயிர்த்தெழுந்தது.

 

பெருநாள் தொழுகை மற்றும் குத்பாவை முடித்து வைத்தார் இமாம்.பெருநாள் தொழுகை முடிந்த கணம் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி பெருநாள் வாழ்த்துகளைப் பரிமாற்றம் செய்துகொண்டனர்.

ஒரு சிலர் அருகிலிருக்கும் அடக்கஸ்தலம் சென்று மரணித்தவர்களுக்கு ஜியாரத் செய்துக்கொண்டிருந்தனர். தொழுகை முடித்தவுடனே தோப்பில் மாடுகள் அறுக்கப்பட்டிருந்தன.


ஒரு சிலர் உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று வாழ்த்துகள் கூறினர். ஒருசிலரோ..!சமீபத்தில் மரணித்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டிற்குச் சென்று துக்கம் விசாரித்தனர்.


அமீரும் அவசரம்,அவசரமாக வீட்டையடைந்து குர்பானி கொடுப்பதைக் காண தன் மனைவியை அழைத்தான். "இந்த வருஷமாவது அல்லாவுக்காக குர்பானி கொடுங்களேன்" மனைவி கூறியவுடன்  அவனறியாமல் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து, பெரியத் தவறு‌செய்து விட்டோமென்று சஜ்தாவில் மன்னிப்புக் கோரினான் அமீர்.


நன்மை நாடி குர்பானி கொடுத்து 

 குர்பானியின் இறைச்சியை தனக்கும், உறவினருக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் பகிர்ந்து கொடுத்தான் அமீர்.


மாடு, ஆடுகளின் தோல்களை மத்ரஸாவின் ஊழியர்கள் கொண்டு சென்றனர்.


A.H.யாசிர் ஹசனி

lptyasir@gmail.com

Tags: சிறுகதை லால்பேட்டை

Share this