Breaking News

தமிழ்நாடு அரசின் சின்னமாக ஏன் புதிய சட்டமன்ற கட்டிடம் அமைய கூடாது?

நிர்வாகி
0
இந்தியா மதசார்பற்ற நாடு. குறிப்பாக தமிழகம் சமயசார்பற்ற, அமைதி பூத்துக் குலுங்கும் சமதர்மபூமி. பெரியார், அண்ணா, காயிதே மில்லத் போன்ற பெருந்தகைகளால் பக்குவப் படுத்தப்பட்ட மண் இது.
ஆனால் தமிழக அரசின் சின்னமாக கோவில் கோபுரம் கடந்த அரை நூற்றாண்டு காலமாக இடம்பெற்று வருகிறது. அது எந்த ஊர் கோவில் என்பதே பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாது. அந்த கோபுரம் உண்மையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் நகர கோவில் கோபுரமாகும். தமிழகத்தில் ஸ்ரீவில்லிப் புத்தூரில் மட்டும்தான் கோவில் உள்ளதா?

1000 ஆண்டுகால பழமை கொண்ட தஞ்சாவூர் பெரிய கோவில், கட்டிடக்கலையில் சிறப்பிடம் பெற்ற மதுரைக்கோவில், ஸ்ரீரங்கம் கோவில் போன்றவைகள் இடம்பெறாமல் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் கோபுரம் இடம்பெற்றதற்காக நாம் காரணங்கள் தேடி அலைய வேண்டியதில்லை. ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த குமாரசாமி ராஜா தமிழக முதலமைச்சராக இருந்துபோது தனது ஊரின் கோவிலை அரசு சின்னமாக அறிவித்து விட்டார். அவ்வளவுதான். ஆனால் தமிழக, அரசின் முக்கிய ஆவணங்களில், கோப்புகளில் கோபுரம் இடம்பெறுவது நாட்டு மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் நெருடலையும் முகச்சுளிப்பையும் ஏற்படுத்தியிருப்பது உண்மை.

தமிழக அரசின் சின்னம் மதசார் பின்மைக்கு எதிரானது என்ற கருத்தினை கோடிட்டுக் காட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் சட்டமன்றத்தில் உரையாற்றியிருக்கிறார். ஒரு மதத்தின் வழிபாட்டுத்தலத்தை அனைத்து மக்களுக்கும் உரிமையான அரசாங்கத்தின் சின்னமாக எவ்வாறு ஏற்றுக் கொள்ளமுடியும் என்றும் அவர் கேள்வி விடுத்திருக்கிறார்.

கூர்ந்து நோக்க வேண்டிய அதி முக்கியமான விஷயத்தை திராவிட கட்சிகள் இதுவரை எப்படி கோட்டை விட்டார்கள்?

திராவிட இயக்கத்தின் பிதாமகர்களாக கருதப்படும் பெரியார், அண்ணா என அரசியலில் கோலோச்சியவர்கள், இப்போது முதல்வராக வீற்றிருக்கும் கலைஞர் உள்ளிட்டோர் எவ்வாறு கோட்டை விட்டார்கள்?

அதிர்ச்சியளிக்கக் கூடிய ஆச்சரிய மல்லவா? மதசார்பின்மையை பேணு வதில், சமூக நல்லிணக்கணத்தை கட்டிக்காப்பதில் அலட்சியம் காட்டி யதால் தான் தமிழக அரசின் சின்னமாக கோவில் கோபுரம், இன்றுவரை இடம் பெற்றிருக்கிறது என குற்றம் சாட்டமாட்டோம்.
ஆனைக்கும் அடி சறுக்கும் அல்லவா? எப்படியோ கவனத்தில் கொள்ளாமல் விட்டுவிட்டார்கள். போகட்டும் இருப்பினும் இன்னமும் காலம் கடந்து விடவில்லை.

சமீபத்தில் வெளியிடப்பட்ட நீதிபதி லிபரான் தலைமையிலான ஆணையம் மிக முக்கிய நெறிமுறையை அரசுகள் வழிகாட்டியாக கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

அயோத்தியில் பாப்ரி மஸ்ஜித் என்ற சிறப்பு வாய்ந்த, வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த பள்ளிவாசலை தகர்த்து தரைமட்டமாக்கிய சண்டாளர் களை தோலுரித்துக் காட்டிய லிபரான் ஆணையம் அரசுகளுக்கு காலத்திற்கேற்க ஒரு கடமையை பரிந்துரைத்தது.

அதில் அரசு அலுவலகங்கள் அரசாங்க முத்திரைகள், மற்றும் சின்னங்களில் மத அடையாளங்கள் இடம்பெறக்கூடாது என நீதிபதி லிபரான் தெரிவித்தார்.

நீதிபதி லிபரானின் பரிந்துரையை மறுப்பின்றி அனைத்து அரசுகளும் பின்பற்ற வேண்டிய ஒன்றாகும்.

புதிய தலைமைச் செயலகம், மற்றும் சட்டமன்ற கட்டிடத்தை நிறுவி கோலாகலமாக திறப்பு விழாவும் நடத்திய தமிழக அரசு, தமிழக அரசின் சின்னமாக புதிய சட்ட மன்ற கட்டிடத்தையே இடம்பெற செய்யலாமே?

பழையன கழிதலும் புதியன புகுதலும் தவறல்லவே. உடனடியாக உற்சாக அறிவிப்பு வெளிவருமா?

-ஹபீபா பாலன்

Share this