Breaking News

ஒரு குடும்பத்தில், பெண் படித்தால் சமூகமே முன்னேறும் இப்தார் நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பேச்சு

நிர்வாகி
0
ஒரு குடும்பத்தில் ஆண் படித்தால் குடும்பம் முன்னேறும், பெண் படித்தால் சமூகமே முன்னேறும் என்று கவிஞர் கனிமொழி எம்.பி. பேசினார்.


இப்தார் நிகழ்ச்சி

இந்திய ïனியன் முஸ்லிம் லீக் மாநில மகளிர் அணி சார்பில், இப்தார் நிகழ்ச்சியும், ஏழை முஸ்லிம் பெண்களுக்கு தையல் மிஷின், புடவை, அரிசி வழங்கும் நிகழ்ச்சியும் சென்னை எழும்பூரில் உள்ள இம்பீரியல் ஓட்டலில் நேற்று மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, இந்திய ïனியன் முஸ்லிம் லீக் மாநில மகளிர் அணி தலைவி பாத்திமா முசப்பர் தலைமை தாங்கினார். கவிஞர் கனிமொழி எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, இப்தார் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.

நினைவு பரிசு

நிகழ்ச்சியில், தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவி எஸ்.பி.சற்குணபாண்டியன், தி.மு.க. மகளிர் அணி தலைவர் நூர்ஜகான் பேகம், துணைத்தலைவர் விஜயா தாயன்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின்போது, `பெண்ணியம் போற்றுவோம்' என்ற நிகழ்ச்சியை கலைஞர் டி.வி.க்காக நடத்தி வரும் காயல் இளவரசுக்கு கவிஞர் கனிமொழி நினைவு பரிசு வழங்கினார்.

பின்னர், முஸ்லிம் ஏழை பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கவிஞர் கனிமொழி எம்.பி. பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

இரட்டிப்பு சந்தோஷம்

இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகையும், விநாயகர் சதுர்த்தியும் ஒரே சமயத்தில் வருவதாக முன்னதாக பேசியவர் கூறினார். அதனால் பயம் வேண்டாம். அதை இரட்டிப்பு சந்தோஷமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

சமூகம் முன்னேற...

ஒருவரை ஒருவர் நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள் என்று இஸ்லாம் சொல்கிறது. தலைவர் கலைஞர் இஸ்லாமிய மக்களின் உண்மையான சகோதரர் ஆவார். எப்போதும் உங்களுக்கு கைகொடுப்பார். முஸ்லிம் குழந்தைகளின் கல்விக்காக 3.5 சதவீதம் இடஒதுக்கீட்டை அவர் வழங்கியுள்ளார். அதை நீங்கள் நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் முன்னேற முடியும்.

ஒரு குடும்பத்தில் ஆண் படித்தால், அந்த குடும்பம் மட்டுமே முன்னேற முடியும். ஆனால், ஒரு குடும்பத்தில் பெண் படித்தால், அந்த சமூகமே முன்னேறும்.

இவ்வாறு கவிஞர் கனிமொழி எம்.பி. பேசினார்.

Share this