Breaking News

பாபர் மசூதி தீர்ப்பு குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவரின் பேட்டி

நிர்வாகி
0
பாபரி மஸ்ஜித் நில வழக்கில் அலஹாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பற்றி உங்கள் கருத்து என்ன?


அலஹாபாத் உயர் நீதிமன்றம் பாபரி மஸ்ஜித் நில வழக்கு சம்பந்தமாக வெளியிட்டுள்ள தீர்ப்பை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். மூன்று நீதிபதிகளும் வழக்கின் முக்கிய பல விசயங்களில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது. எனினும் தீர்ப்பின் மையக் கருத்து சர்ச்சைக்குரிய நிலத்தின் இரண்டு பகுதிகளை ஹிந்துக்களுக்கும், ஒரு பகுதியை முஸ்லிம்களுக்கும் பிரித்து அளிக்குமாறு ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் தற்போது சிலைகள் வைக்கப்பட்டிருக்கும் பள்ளிவாசலின் மைய பகுதியை ஹிந்துக்களுக்கு கொடுக்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பாப்புலர் ஃப்ரண்டைப் பொறுத்தவரையில் நீதிமன்ற தீர்ப்பு உண்மை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் அமையவில்லை மாறாக வெறும் மதநம்பிக்கையின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. இது நீதி பரிபாலன முறைக்கு ஏற்புடைய செயல் அல்ல. இதில் இன்னுமொரு வினோதம் மத நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாக கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் முஸ்லிம்கள் மத நம்பிக்கையுடன் 450 ஆண்டுகாலமாக தொழுகை நடத்தியதும் அங்கு நடந்த உண்மை நிகழ்வுகளும் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் இவ்வழக்கில் அகழ்வாராய்ச்சியின் கண்டுபிடிப்பிற்கு அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கின்றது. அகழ்வாராய்ச்சியின் அடிப்படையில் பார்த்தாலும் பாபரி மஸ்ஜிதில் மொத்தம் 5 அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த அகழ்வாராய்ச்சிகளில் ராமர் கோயில் இருந்ததற்கான ஆதாரமோ அல்லது ராமர் கோயிலை இடித்துத்தான் பாபரி மஸ்ஜித் கட்டப்பட்டது என்பதற்கான ஆதாரமோ கிடைக்கப் பெறவில்லை. பிரபல அறிவு ஜீவிகளும் வரலாற்று ஆய்வாளர்களுமான ரொமிலா தாப்பர், டாக்டர் கே.என். பனிக்கர், கே.எம். ஸ்ரீ மாலி உட்பட 60க்கும் மேற்பட்ட பிரபல அறிஞர்களும் அறிவு ஜீவிகளும் ஒருங்கிணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் செங்கல் கட்டிகள் மற்றும் சுண்ணாம்புக்கூடு ஆகியவை அகழ்வாராய்ச்சியின் போது கைப்பற்றப்பட்டதிலிருந்து மஸ்ஜிதிற்கு அடியில் கோயில் இருக்கவில்லை என்பதை நிரூபிக்கின்றன. நெடுந் தூண்கள் இருப்பதாகக் கூறும் அகழ்வாராய்ச்சித் துறையின் சர்வே அறிக்கை தூண்கள் கண்டுபிடிக்காத சூழலில் போலியாகும். இவர்களின் ஆவணங்கள் வல்லுநர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களின் விரிவான ஆய்விற்கு உட்படுத்தப்பட வேண்டியதாகும். ராமர் பிறந்த இடத்தில்தான் இதுநாள் வரை பாபர் மஸ்ஜித் நிலைபெற்றிருந்தது என்ற வாதத்தை நிரூபிக்க ஆதாரங்கள் ஒன்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. இதற்கு நீதிபதிகள் கூறும் ஆதாரம் என்னவென்றால் தொன்றுதொட்டே இந்த நம்பிக்கை இருந்துவருகின்றது என்பதே. புராணக் கதைகளின் அடிப்படையில் இந்த நம்பிக்கையை அங்கீகரிப்பதோடு மட்டுமல்ல இத்தகையதொரு நம்பிக்கையை சொத்துத் தகராறில் பயன்படுத்துவதும் தவறாகும் என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். எனவே இனிவரும் காலங்களில் இந்நடைமுறையை பின்பற்றி அகழ்வாராய்ச்சியின் அடிப்படையில் தான் வழக்கின் தீர்ப்புகள் வரையறுக்கப்படுமானால், அது நம் நாட்டிலுள்ள பல மத மற்றும் பண்டைய கால கட்டடங்களுக்கு பெரும் ஆபத்தாக அமைய வாய்ப்பிருக்கின்றது. இன்னுமொரு முரண்பாடு இவ்வழக்கில் எந்த கட்சியினரும் நிலத்தை பிரித்து வழங்கும்படி கோரவில்லை. மொத்தத்தில் நீதிமன்ற நடைமுறைக்ளுக்கு மாறாக, அரசியல்வாதிகள் செய்வதை நீதிமன்றம் செய்துள்ளது. நீதிமன்றத்தின் வேலை சமரசம் செய்வது அல்ல, நீதியை வழங்கவேண்டும். எனவே இது நீதிப்பூர்வமான தீர்ப்பு அல்ல.

சங்பரிவார்களின் நிலைபாடு பற்றி?

சங்பரிவார்களின் நிலைப்பாட்டில் புதுமை ஒன்றும் இல்லை. அவர்கள் எப்போதும் போலவே எங்களை கேள்விகேட்க யாருமில்லை என்கின்ற ரீதியில் செயல்பட்டு வருகின்றனர். நீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்னர் V.H.P. போன்ற சங்பரிவார இயக்கங்கள் ராமஜன்ம பூமியைப் பற்றி தீர்ப்பு கூறுவதற்கு நீதிமன்றத்திற்கு தகுதியோ அதிகாரமோ இல்லை என்று கூறி 60 வருடமாக அவர்களும் பங்கேற்ற நீதிமன்ற நடவடிக்கையை கேலிக்கூத்தாக்கினர். நீதிமன்ற நடவடிக்கைகளை கொஞ்சமும் சட்டை செய்யாது, இராமர் கோயிலின் நீளம், அகலம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது உட்பட அனைத்தையும் தீர்மானித்து தேசிய அளவில் ராமர்கோயில் கட்ட பிரச்சாரங்களையும் மேற்கொண்டனர். தமிழகத்தில் பா.ஜ.க.வின் இல. கணேசன் தீர்ப்பு எப்படி வந்தாலும் அது பா.ஜ.க.வுக்கு உந்து சக்தியாக இருக்கும் என்று தனது உள்நோக்கத்தை வெளிப்படுத்தினார். தீர்ப்பு வந்த பின்பும்கூட சங்பரிவார்கள் நீதிமன்றம் முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ள ஒரு பங்கு இடத்தையும் விட்டுக்கொடுக்க வேண்டும் என்றே கூறி வருகின்றனர். காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரிடம் மூன்றில் ஒரு பகுதி நிலத்தில் மசூதி கட்ட அனுமதிப்பீர்களா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, முஸ்லிம்களுக்கு அயோத்தியில் 7 மசூதிகள் உள்ளன. அதனால் இன்னொரு மசூதியை கட்ட முஸ்லிம்களே விரும்பமாட்டார்கள் என்றும், முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கு என்று இன்னொரு மசூதி தேவையில்லை. அவர்கள் எந்த இடத்தில் இருந்தும் மக்காவை நோக்கி தொழுகை நடத்த முடியும், அதனால் இந்த இடத்தில்தான் மசூதி கட்ட வேண்டும் என்ற அவசியம் முஸ்லிம்களுக்கு இல்லை என்றும் முஸ்லிம்கள் விசயத்தில் நாட்டாமை தனமாக தீர்ப்பே கூறிவிட்டார். வி.ஹி.ப. தலைவர்களில் ஒருவரான கிரிராஜ் கிசோர் இன்னும் ஒருபடி மேலேபோய் காசி, மதுராவையும் முஸ்லிம்கள் விட்டுக்க கொடுக்க முன்வரவேண்டும் என்று அடுத்த கட்ட பிரச்சாரத்தையும் ஆரம்பித்துவிட்டார். எனவே சட்டம், நீதி என்பதெல்லாம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்பதை போலத்தான் அவர்களுடைய செயல்பாடுகள் இருக்கின்றன. ஆனால் ஒன்று மட்டும் உண்மை இதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை. நீதியின் மீதும் அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள மதசார்பற்ற விழுமியங்கள் மீதும் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் ஓர் அணியில் திரண்டு இந்த ஃபாஸிஸ நடவடிக்கையை முறியடிக்க முன்வருவதுதான் ஒரே வழி.

சட்டவல்லுநர்கள் இத்தீர்ப்பை எப்படி பார்க்கின்றனர்?

நாட்டின் மிகச்சிறந்த சட்ட வல்லுநர்கள் இத்தீர்ப்பு குறித்து ஆச்சரியத்தையும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளனர். நீதி வழங்கும் முறையின் அடிப்படை காற்றில் விடப்பட்டதாக கருத்து வெளியிட்டுள்ளனர். பாபரி மஸ்ஜித் என்று முஸ்லிம்களாலும் ராமர் ஜென்மபூமி என்று இந்துக்களாலும் சொந்தம் கொண்டாடப்படும் அந்த இடம் அதாவது 2.77 ஏக்கர் யாருக்கு சொந்தமானது என்பதுதான் வழக்கு? மாறாக அங்கே இருக்க வேண்டியது பாபரி மஸ்ஜிதா அல்லது ராமர் கோயிலா என்பதல்ல வழக்கு. எனவே இந்த வழக்கின் அடிப்படையில் பார்த்தால் நீதிமன்றத்தின்பணி சட்டப்படி இடம் யாருக்கு சொந்தம் என்று தீர்மானிப்பதுதானே தவிர வெறும் மத நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்புக் கூறுவது அல்ல நீதிமன்றத்தின் வேலை. இதுதான் நியாயமானாதாக இருக்க முடியும். நீதிமன்றத்தின் வேலை சமரசம் செய்வது அல்ல, சட்டத்தின் அடிப்படையிலான தெளிவான வழிகாட்டுதல். இதை வழங்குவதில் நீதிமன்றம் சறுகியிருப்பதாகவே தெரிகின்றது. எனவேதான் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், மனிதஉரிமை ஆர்வலருமான வி.ஆர். கிருஷ்ணய்யர், உயர் நீதிமன்ற தீர்ப்பு முற்றிலும் ஆச்சரியமளிப்பதாக கூறியுள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில், இது சரியான தீர்ப்பு அல்ல. இத்தீர்ப்பு வெறும் தந்திரமே. நீதிபதிகள் மதம் மற்றும் ஜாதிக்கு அப்பால் நின்று சிந்திக்க வேண்டும். அவர்களையும் மதவெறி தீண்டிவிட்டதா என்ற ஐயத்தை உருவாக்குகின்றது 3 பங்காக பிரிக்க வேண்டும் என்ற தீர்ப்பு என்றிருக்கிறார். அதேபோல் அரசியல் சட்ட வல்லுநரான ராஜிவ் தவான் இத்தீர்ப்பு குறித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார். நீதிமன்றத்தீர்ப்பு ஹிந்து பிரிவினருக்கு ஆதரவானது, முஸ்லிம்களுக்கு நிலத்தின் ஒரு பகுதியை வழங்குவதற்கான தீர்மானம் கருணை காண்பிப்பது போன்ற நடவடிக்கை எனவும் நீதிமன்றத் தீர்ப்பு கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு முறையை நினைவூட்டுவதாக தெரிவித்துள்ளார். இதனையே மூத்த வழக்கறிஞரான பி.பி. ராவ் வழிமொழிந்துள்ளார். பிரபல அறிவு ஜீவிகளும் வரலாற்று ஆய்வாளர்களுமான ரொமிலா தாப்பர், டாக்டர் கே.என். பனிக்கர், கே.எம். ஸ்ரீ மாலி உட்பட 60க்கும் மேற்பட்ட பிரபல அறிஞர்களும் அறிவு ஜீவிகளும் ஒருங்கிணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் உயர்நீதிமன்றத் தீர்ப்பு தேசத்தின் மதச்சார்பின்மைக்கும் நீதித்துறையின் கட்டமைப்பின் மீதும் விழுந்த அடி எனத் தெரிவித்துள்ளனர். இவையனைத்தும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. பொதுவில் நீதிமன்ற தீர்ப்பு நீதி பரிபாலனமுறையை கேள்விக் குறியாக்கியுள்ளது.

இந்திய முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
நமது அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள மதசார்பற்ற ஜனநாயக விழுமியங்களுக்கு நீண்ட காலமாக நடந்து வருகின்ற சோதனைதான் பாபரி மஸ்ஜித் பிரச்சனையும் நடந்துவருகின்ற வழக்கும் சுமார் 60 வருடகாலமாக முஸ்லிம்கள் பொறுமையோடு சட்டரீதியாக போராடிப் பெற்ற உயர் நீதிமன்றத்தீர்ப்பு நமக்கு அதிர்ச்சியை அளிக்கின்றது. ஆனால் உயர் நீதிமன்றத்தீர்ப்பு இறுதியானதல்ல. உச்ச நீதிமன்றம் இருக்கிறது. உ.பி. சுன்னத் முஸ்லிம் வக்ஃப் வாரியமும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று திட்ட வட்டமாக அறிவித்துள்ளது. எனவே இதில் விரக்தி அடையவோ ஆவேசம் அடையவோ ஒன்றும் இல்லை. குறிப்பாக இளைஞர்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது, நீங்கள் தான் சமூகத்தின், தேசத்தின் எதிர்காலம் எனவே பொறுப்புகளை உணர்ந்து செயல்படவேண்டும். உலக வரலாற்றில் சில நீதிமன்ற தீர்ப்புகள் கூட மிகப்பெரிய சமூகமாற்றத்தை மிகப்பெரிய விழிப்புணர்வை மிகப்பெரிய எழுச்சியை உண்டுபண்ணியிருக்கின்றது. எனவே இந்திய முஸ்லிம்களாகிய நாமும் மதசார்பற்ற விழுமியங்கள் மீது நம்பிக்கை கொண்ட அனைத்து இந்திய மக்களும் ஒன்றிணைந்து நீதிக்காக போராடக்கிடைத்த வாய்ப்பாக இதனைக்கருதி சட்ட ரீதியிலும் ஜனநாயக அடிப்படையிலும் போராடி பாபரி மஸ்ஜிதின் நிலத்தை மீட்க வேண்டும். பொது அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் என்றென்றும் பேணிபாதுகாக்க வேண்டும். எனவே இந்திய முஸ்லிம்கள் நம்பிக்கையுடன் செயல்படிவேண்டிய தருணம் இது. நிச்சயமாக நம்பிக்கையுடன் செயல்படுவார்கள் என்று நம்புகின்றேன்.

பாப்புலர் ஃப்ரண்டின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

பாப்புலர் ஃப்ரண்ட் முஸ்லிம் சமூகத்தையும், மதசார்பற்ற விழுமியங்கள் மீது நம்பிக்கை கொண்ட அனைத்து இந்திய மக்களையும் ஒன்றிணைத்து ஜனநாயக மற்றும் சட்டரீதியான போராட்டத்தை தொடர்ந்து நடத்தி பாபரி மஸ்ஜிதின் நிலத்தை மீட்கப்போராடும். இன்ஷாஅல்லாஹ். உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடத்துவதற்கு பங்காற்றியது போலவே, உச்ச நீதிமன்றத்தில் வழக்கை நடத்துவதிலும் முக்கிய பங்காற்றுவோம். பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர்கள் டெல்லியில் அமர்ந்து நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றார்கள். உ.பி. சுன்னத் வக்ஃப் வாரிய வழக்கறிஞர்களோடும் சட்ட வல்லுநர்களோடும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். நீதியின் மீதும், மதசார்பற்ற விழுமியங்களின் மீதும் நம்பிக்கையுள்ள சட்ட வல்லுனர்களை ஒருங்கிணைத்து நீதிக்கான போராட்டத்தை வலுப்படுத்துவதைப் பற்றியும் ஆலோசித்து வருகின்றோம். தமிழகத்தில் செயலகக் குழுவில் கலந்தாலோசனை செய்துள்ளோம். விரைவில் மாநில செயற்குழுவும் கூடவிருக்கின்றது. அதில் இது சம்பந்தமாக கலந்தாலோசனை மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்வோம். பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்வது, முஸ்லிம் சமூகம் இதில் விரக்தியடையவோ, நிராசையடையவோ வேண்டிய அவசியம் இல்லை. இது இறுதியான தீர்ப்பும் இல்லை. சட்டத்தின் அடிப்படையில், உண்மையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற நீதிக்கான குரல்கள் வலுக்க ஆரம்பித்துள்ளது. உண்மை மற்றும் ஆவணங்களை அடிப்படையாக வைத்து சட்டப்படி தீர்ப்பு அளிக்கப்பட்டால் நிச்சயமாக உச்சநீதிமன்றத்தில் நமக்கு நீதி கிடைக்கும். எனவே தொடர்ந்து நாம் நீதிக்கான பயணத்தை முன்னெடுத்துச் செல்வோம். இன்ஷாஅல்லாஹ் நீதி நிலைபெறும்.

Share this