Breaking News

தமிழகத்தின் நிதிச்சுமை பெரும் தத்தளிப்பில் உள்ளதையே இடைக்கால பட்ஜெட் அறிவிப்பு வெளிக்காட்டுகிறது! - எஸ்.டி.பி.ஐ.

நிர்வாகி
0

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் அறிக்கையானது, தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்திருப்பதையும், அடுத்த நிதியாண்டிற்குள் இந்த கடன் சுமை மேலும் அதிகரித்து தமிழகம் பெரும் நிதிச்சுமையில் தத்தளிக்கப் போகிறது என்பதை ஒப்புதலாக அறிவிக்கும் அறிவிக்கையாகவே உள்ளது.

நகர்புற ஊதிய வேலைவாய்ப்புத் திட்டம், மினி கிளினிக்குகளுக்கு ரூ.140 கோடி ஒதுக்கீடு என்பதை தாண்டி, பட்ஜெட் அறிவிப்பில் எந்தவித புது அறிவிப்புகளும் சொல்லும்படியாக இல்லை.

மேலும், இந்த பட்ஜெட் அறிவிக்கை, மத்திய அரசின் நிதி பங்கீட்டில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகின்றது என்பதை தெளிவாக்கியுள்ளது. உள்ளாட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான மானிய தொகையை மத்திய அரசு விடுவிக்காததையும் பட்ஜெட் தெளிவாக்கியுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு காரணமான, அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளையின் விலையை குறைக்கும் வகையில், பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வரி குறைப்பு அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

எதிர்வரும் தேர்தலை கருத்தில்கொண்டு பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும் என்ற மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக பட்ஜெட் அறிவிப்பு அமைந்துள்ளது. மொத்தத்தில் இந்த இடைக்கால பட்ஜெட் அறிவிப்பானது தமிழகத்தின் நிதிச்சுமை பெரும் தத்தளிப்பில் உள்ளதை வெளிக்காட்டும் அறிவிப்பாகவே அமைந்துள்ளது.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags: செய்திகள்

Share this