Breaking News

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை வரலாற்றை இங்கே பதிவிடுகிறேன்! நன்றி : காயல் மகபூப்

நிர்வாகி
1

தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்!

அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் 15 ஆவது நிர்வாகிகளாக தலைவர் மௌலானா மவ்லவி அல்ஹாஜ் P.A.காஜா முயீனுத்தீன் பாகவி ஹஜ்ரத், பொதுச்செயலாளராக மௌலானா மவ்லவி அல்ஹாஜ் V.S.அன்வர் பாதுஷா உலவி ஹஜ்ரத், பொருளாளராக மௌலானா மவ்லவி அல்ஹாஜ் S. M.மீரான் மிஸ்பாஹி ஹஜ்ரத் இன்று நடைபெற்ற தேர்தலில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, சங்கைக்குரிய உலமா பெருமக்களை ஒருங்கிணைக்கும் பணியிலும், மார்க்க விஷயங்களில் சமுதாயத்தை வழிநடத்தும் சேவையிலும் எல்லாம் வல்ல அல்லாஹ் இவர்களுக்கு நிறைவான வெற்றியை அளிக்க பிரார்த்திக்கிறேன்.

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை யை பற்றி சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எனக்கு தெரிந்த வரலாற்றை இங்கே பதிவிடுகிறேன்.

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை உதயம்

முதல் உலக மகாயுத்தம் 1918 நவம்பர் 11 ஆம் தேதி முடிவுக்கு வந்தபோது துருக்கியை தலைமை இடமாக கொண்டு நடைபெற்று வந்த இஸ்லாமிய கிலாஃபா ஆட்சியையும், அந்த ஆட்சியில் இடம்பெற்ற பகுதிகளின் இஸ்லாமிய புனிதத் தலங்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறை இந்திய முஸ்லிம்களிடையே ஏற்பட்டது. இந்த உணர்வால் இந்திய விடுதலைப் போரில் கிலாஃபத் இயக்கம் ஒரு குறிப்பிடத்தக்க சக்தியாகத் திகழ்ந்தது.

இந்திய விடுதலைப் போரில் சங்கைக்குரிய உலமா பெருமக்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித்தனர். இதற்காக தமிழகம் உள்பட பல பகுதிகளில் மஜ்லிஸுல் உலமா, ஜம்மியத் உலமா அமைப்புக்கள் உருவாயின. 1919 நவம்பர் 13 அன்று `ஜம்மியத் உலமாயே ஹிந்து’ மௌலானா முஃப்தி கிஃபாயதுல்லாஹ் அவர்கள் தலைமையில் டெல்லியில் துவக்கப்பட்டது. நாளடைவில் இது காங்கிரஸுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொண்டதாக கூறி, ஷம்ஷுல் இஸ்லாம் அல்லாமா ஷப்பீர் அஹமது உஸ்மானி அவர்கள் தலைமையில் `ஜம்மியத் உலமாயே இஸ்லாம்’ 1929 டிசம்பர் 30 அன்று உருவாக்கப்பட்டு அது முஸ்லிம் லீகிற்கு ஆதரவாக செயல்பட்டது.

1947 ஆகஸ்ட் 15ல் நாடு இந்தியா - பாகிஸ்தான் என விடுதலை அடைந்த போது பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. முஸ்லிம் தலைவர்கள் பலர் பாகிஸ்தான் சென்று விட்டனர்.

1948 மார்ச் 10 அன்று சென்னை அரசினர் தோட்டத்திலுள்ள ராஜாஜி மண்டபத்தில் அகில இந்திய முஸ்லிம் லீக் கவுன்ஸில் கூட்டம் நடத்தப்பட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற பெயரில் காயிதே மில்லத் தலைமையில் முஸ்லிம் லீக் செயல்படும் என முடிவெடுக்கப்பட்டது.

காயிதே மில்லத் எம். முஹம்மது இஸ்மாயில் சாஹிப் திருநெல்வேலி பேட்டையைச் சேர்ந்தவர்கள். நாட்டு பிரிவினைக்குப் பின் ஜம்மிய்யத் உலமாயே இஸ்லாம் நிர்வாகிகள் பாகிஸ்தான் சென்று விட்ட நிலையில் இங்கு உலமாக்கள் சபை உருவாக்க வேண்டும் என திருநெல்வேலி பேட்டை ரியாளுல் ஜினான் அரபிக் கல்லூரி உலமா பெருமக்களிடம் 1956-களில் வலியுறுத்தி வந்தார்கள். அதனை அங்கு பணியாற்றி வந்த முதல்வர் சித்தையன் கோட்டை ஸகீர் ஹழ்ரத் என்ற மௌலானா ஹூசைன் முஹம்மது பாகவி ஹழ்ரத், மௌலானா பி.ஏ.கலீலுர் ரஹ்மான் ரியாஜி ஹழ்ரத் போன்றோர் ஆதரித்தனர்.

1958 ஜனவரி 11,12 தேதிகளில் திருச்சி பெரிய சவுக் ஆற்காடு நவாப் எண்டோமெண்ட் ஜும் ஆ மஸ்ஜித் முன்புறமிருந்த மாபெரும் மைதானத்தில் முஸ்லிம் லீக் ஊழியர்கள் மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள், சங்கைக்குரிய ஆலிம் பெருமக்களுக்காக ஜமா அத்துல் உலமா சபை அமைக்கப்படுவதாகவும் அதன் அமைப்பாளராக அல்லாமா அமானி ஹள்ரத் அவர்கள் செயல்படுவார்கள் என்றும் இம்மாநாட்டில் அறிவித்தார்.

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி அன்றைய முதல்வரும் வேலூர்மாவட்டம் பள்ளிகொண்டாவைச் சேர்ந்தவருமான சங்கைக்குரிய ஷைகுல் மில்லத் மௌலானா ஜியாவுத்தீன் அஹமத் அமானி ஹள்ரத், `முஸ்லிம்லீகும் ஜமாஅத்துல் உலமா சபையும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்படும்’ என பலத்த தக்பீர் முழக்கங்களுக்கிடையே இம்மாநாட்டில் அறிவித்தார்கள். இம் மாநாட்டில் ஏராளமான உலமா பெருமக்களும் மதரஸா மாணவர் களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதன்பின்னர் 1959-ல் மதுரை சுங்கம் பள்ளிவாசலில் ஜமா அத்துல் உலமா சபையின் முதலாவது நிர்வாகிகள் தேர்வு நடை பெற்றது. வேலூர் அல்-பாக்கியாதுஸ் ஸாலிஹாத் முதல்வர் மௌலானா ஷைகு ஆதம் ஹள்ரத் கௌரவ தலைவராகவும், ஷைகுல் மில்லத் ஜியாவுதீன் அஹமத் அமானி ஹள்ரத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். அதன்பின் 10 ஆண்டுகளுக்கு மேல் தேர்தல் நடை பெறவில்லை.

1970 ஏப்ரல் 6 ஆம் நாள் காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீப் சபையில் இதன் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. 9.8.1966-ல் மரணமடைந்திருந்த அல்லாமா அமானி ஹள்ரத் அவர்கள் மறைவால் காலியாகியிருந்த பதவிக்கு காயல்பட்டினத்தை சேர்ந்த ஷெய்குல் உலமா அல்லாமா மு.க.செய்யது இபுராகிம் ஆலிம் அவர்களை தலைவர் பொறுப்பேற்க அனைவரும் வலியுறுத்தினர்.

ஆனால் அவர்கள் மறுத்து விட்டார்கள். எனவே, தலைவர் தேர்வு செய்யப்படாமல் கீழக்கரை மௌலானா அஷ்ஷெய்கு தைக்கா அஹ்மது அப்துல் காதர் ஆலிம் அவர்கள் கௌரவ தலைவராக தேர்வு செய்யப்பட்டார்கள். (இக்கூட்டத்தில் உலமா பெரு மக்களுக்கு சேவகம் செய்யும் வாய்ப்பு கிடைக்கப் பெற்ற சிறுவர் களில்ஒருவனாக நானும் பணி செய்தேன்.)

1977-ல் லால்பேட்டை மௌலானா கே.ஏ.முஹம்மது ஜகரிய்யா ஹள்ரத் 1983-ல் நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா முதல்வர் மௌலானா எஸ்.ஆர். ஷம்சுல் ஹுதா ஹள்ரத் 1988-ல் மௌலானா பி.ஏ. கலீலுர் ரஹ்மான் ரியாஜி (பேட்டை ரியாலுல் ஜினான் முதல்வர்) 1992-ல் வேலூர் பாகியாதுஸ் ஸலிஹாத் முதல்வர் மௌலானா ஹெச் கமாலுத்தீன் பாகவி ஹள்ரத், 1995 மற்றும் 1998-ல் கிளியனூர் அல்மத்ரஸதுர் ரஹ்மானியா முதல்வர் அப்துஸ் ஸலாம் ஹள்ரத்.

2002-ல் ஷைகுல் ஹதீஸ் மௌலானா ஏ.இ.எம். அப்துல் ரஹ்மான் மிஸ்பாஹி ஹள்ரத் 2007-ல் வீரசோழன் மௌலானா ஓ.எம். அப்துல் காதர் ஹள்ரத் 2008, 2012 மற்றும் 2014-ல் மௌலானா ஏ.இ.எம். அப்துல் ரஹ்மான் ஹள்ரத் ஆகியோர் இதன் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டார்கள்.

ஜமா அத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர்களாக இதுவரை மதுரை மௌலானா முஹம்மது கனி ஹள்ரத், மௌலானா பி.ஏ.கலீலுர் ரஹ்மான் ரியாஜி ஹள்ரத், ஈரோடு மௌலானா எம்எஸ். உமர் பாரூக் தாவூதி ஹள்ரத், மௌலானா டி.ஜே.எம். ஸலாஹுத்தீன் ஹள்ரத், சென்னை மௌலானாகே.ஏ.நிஜாமுத்தீன் ஹள்ரத், மதுரை மௌலானா முஹம்மது காசிம் ஹள்ரத், ஈரோடு மௌலானா எம்.ஓ. அப்துல் காதர் தாவூதி ஹள்ரத் , மவ்லானா முஹம்மது ரிழா பாஸில் பாகவி ஹள்ரத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பணிபுரிந்து வந்துள்ளனர்.

தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் 14 வது தலைவராக மேலப்பாளையத்தைச் சேர்ந்த உஸ்மானியா அரபிக் கல்லூரி பேராசிரியர் மௌலவி ஹாபிழ் பி.ஏ. காஜா முயீனுத்தீன் பாகவி ஹள்ரத், செயலாளராக மதுரை மாவட்டம் பூதமங்கலத்தை சார்ந்தவரும், சென்னை பெரம்பூர் ரஹ்மானிய்யா ஜும்ஆ மஸ்ஜித் இமாமுமான டாக்டர் வி.எஸ். அன்வர் பாதுஷாஹ் உலவி பி.எச்.டி, பொருளாளராக குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்தவரும், தூத்துக்குடி மன்பவுஸ் ஸலாஹ் அரபிக்கல்லூரி பேராசிரியருமான மௌலவி எஸ்.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி எம்.ஏ., ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து 24.10.2017 செவ்வாய் காலை மாநில தலைமையகமான மதுரை தாருல் உலமா மாநாட்டு அரங்கில் நிர்வாகக்குழு அமைப்புக்கூட்டம் நடைபெற்று மற்ற நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி, சபையின் கவுரவத் தலைவராக அல்லாமா பி.எஸ்.பி.ஜெய்னுல் ஆபிதீன் ஹழரத் கிப்லா அவர்களும், வழிகாட்டுதல் குழுவினர்களாக, 1) மௌலானா ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி லால்பேட்டை 2) மௌலானா டி.ஜே.எம். சலாஹுத்தீன் ரியாஜி (நெல்லை) 3) மௌலானா எம்.எஸ். உமர் பாரூக் தாவூதி (ஈரோடு) 4) மௌலானா ஓ.எம். அப்துல் காதிர் பாக்கவி (வீரசோழன்) 5) மௌலானா முஃப்தீ ஏ. முஹம்மது ரூஹுல் ஹக் ரஷாதி (திருச்சி) 6) மௌலானா எம். முஹம்மது காஸிம் பாகவி (மதுரை) 7) மௌலானா எஸ்.எம்.செய்யது ஈஸா பைஜி (உடுமலை) 8) மௌலானா எஸ்.அப்துல் கபூர் ஜமாலி (திண்டுக்கல்) 9) மௌலானா ஜி.எம். தர்வேஷ் ரஷாதி (சென்னை) ஆகியோரும், துணைத் தலைவர்களாக 1) மௌலானா எஸ்.எம். ஜியாவுத்தீன் பாகவி (அய்யம்பேட்டை) 2) மௌலானா எம்.அலாவுதீன் மிஸ்பாஹி (கம்பம்) 3) மௌலானா காஜி அப்துல் காதிர் மன்பஈ (வேலூர்) ஆகியோரும், சலையின் துணைச் செயலாளர்களாக 1) மௌலானா ஏ. அப்துல் அஜீஸ் பாஜில் பாகவி (கோவை) 2) மௌலானா கே.எம். முஹம்மது இல்யாஸ் ரியாஜி (சென்னை) 3) மௌலானா எம். அப்துர் ரஹ்மான் பாஜில் பாகவி (நீடூர்) ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த நிர்வாகம் மிகச்சிறப்பாக செயல்பட்டு தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் பேராதரவை பெற்றது. அல்ஹம்து லில்லாஹ்!

இப்போதும் 15 ஆவது நிர்வாகிகள் தேர்தலில் சங்கைக்குரிய உலமா பெருமக்களின் பேராதரவோடு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இன்று நாடு போய்க்கொண்டிருக்கும் சூழலில் மார்க்க ரீதியாக முஸ்லிம் சமுதாயத்தை வழி நடத்தும் பொறுப்பு ஜமாஅத்துல் உலாமா சபைக்கு உண்டு. அந்த மகத்தான காரியத்தை குறைவின்றி நிறைவேற்றும் என்ற நம்பிக்கை நமக்கு உண்டு.இஸ்லாமிய விழிப்புணர்வு, முஸ்லிம் சமுதாய கட்டுக்கோப்பு, மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட சன்மார்க்க விஷயங்களில் ஜமாஅத்துல் உலமா சபை மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் பேராதரவோடு துணை நிற்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

- காயல் மகபூப் 9790740787

Tags: சமுதாய செய்திகள்

Share this

1 Comments