Breaking News

ஹிஜாப் எழுச்சி.. புதிய கல்வி நிலையங்களுக்கு வழிகாட்டட்டும்...! மு.தமிமுன் அன்சாரி

நிர்வாகி
0


'ஹிஜாப்' என்பது உரிமைக் குரலின் அடையாளமாக  உருவாகியிருக்கிறது.


'அல்லாஹ் அக்பர்' எனும்  இறைவன் பெரியவன் என்ற முழக்கம் தன்மான சொல்லாடலாக மாறியிருக்கிறது.


மாணவி மஸ்கான் வீராங்கணையாக இந்திய பெண்ணியவாதிகளால் போற்றப்படுகிறார்.


'துணியை பார்க்கவில்லை. அவள் துணிச்சலை பார்க்கிறோம்' என வலைதளங்களில் எல்லா சமூக மக்களும் கொண்டாடுகிறார்கள்.


கர்நாடாகாவில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு சங்கிகள் தரப்பில் தொடுக்கப்பட்ட  வன்முறைகள் இந்திய சமூகத்தை வெறுப்படைய செய்திருக்கிறது.


 மதவெறியர்கள் தனிமைப்பட்டு தவிக்கும் நெருக்கடி நிலையும் இயல்பாக உருவாகியிருக்கிறது.


அரசியலாளர்கள், மதச்சார்பின்மை ஆர்வலர்கள், சமூகநீதியாளர்கள, அறிவுஜீவிகள், படைப்பாளிகள், இலக்கியவாதிகள்,கலைஞர்கள்,சமூக செயல்பாட்டாளர்கள் என இந்தியாவின் பெருமைக்குரியவர்கள் யாவரும் நீதியின் பக்கம் நின்று  இந்தியாவின் ஜனநாயகத்தன்மையை வலிமைப்படுத்தியிருக்கிறார்கள்.


இந்த நேரத்தில் முஸ்லிம் சமூகம் பெருமையில் பொங்கி வழியாமல் பொறுப்புணர்வுடன் சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறது.


முதலில் உணர்ச்சிவசப்படும் வழிநடத்தல்களிலிருந்து தங்களை அவர்கள் தற்காத்து கொள்ள வேண்டும்.


 சிறுபான்மையினர் தரப்பிலிருந்து வகுப்புவாதிகள் தலைதூக்காமல் சமூகத்தை காத்திடும் பெரும் கடமையும் அவர்களுக்கு இருக்கிறது. 


பெரும்பான்மை இந்து சமுதாய சகோதர, சகோதரிகள் இணக்கத்தை விரும்பும் மாண்பு மிக்கவர்கள் என்ற யதார்த்தத்தை உணர்ந்து, தொடர்ந்து பன்மை நீரோட்டத்தோடு பயணிக்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும்.


நன்மதிப்பு மிக்க உயரிய சமூகம் என்ற வரலாற்று பாத்திரத்தை பாதுகாக்க வேண்டிய சமுதாய கடமை மிக முக்கியமானதாகும்.

 

இந்த நேரத்தில் ஆர்வமிகுதியில் பிழைகள் ஏற்பட வழிவகுத்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.


மாணவி மஸ்கானுக்கு பரிசுத்தொகை வழங்குவது, விருதுகள் அறிவிப்பது போன்ற சிலரின் நடவடிக்கைகள்  முதிர்ச்சியானதா? என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன. அந்த கேள்விகள் பொறுப்புமிக்கவை. நியாயமானவை.


அந்த மாணவி விருதுக்காகவோ, விளம்பரத்துக்காகவோ  போராடவில்லை.


அவர் தன் கலாச்சார உரிமைக்காகவும், கல்வி உரிமைக்காகவும் சுதந்திர சிந்தனையோடு போராடி விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். 


அதனால்தான் சகல தரப்பினராலும் அரவணைக்கப்படுகிறார். 


அவரோடு படிக்கும் இந்து சமுதாய மாணவ, மாணவிகள் அவரோடு இப்போதும் அணிவகுக்குகிறார்கள்.


எனவே அவரை பொதுத் தளத்திலேயே விட்டு விடுவது நல்லது. இந்திய பொது சமூகம் அவரை கைப்பிடித்து தூக்கி நிறுத்தியிருக்கிறது.


 எனவே இவற்றையெல்லாம்  கவனத்தில் கொண்டு ,முஸ்லிம் சமூகம்  உணர்ச்சிகளில் மட்டுமே  மூழ்கி விடாமல், இந்த புதிய சூழலை அறிவார்ந்த தளத்திற்கு எடுத்து செல்வது குறித்து விரிவாக  சிந்திக்க வேண்டும்.


அடுத்தடுத்து பெண்கள் பள்ளிக்கூடங்கள், பெண்கள் கல்லூரிகளை தொடங்குவது குறித்த விவாதங்களை தொடங்க வேண்டும்.


ஏற்கனவே தமிழகத்தில் முஸ்லிம்களால் பெண்களுக்காக 13  கலை, அறிவியல் கல்லூரிகள் நடத்தப்படுகின்றன. 


5  பெண்கள் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடங்களும் நடத்தப்படுகின்றன.


இவற்றில் எல்லாம் அனைத்து சமுதாய மாணவிகளும் பயில்கிறார்கள். 


அதற்கு அவர்களின் பெற்றோர்கள் கூறும் முக்கிய காரணம்,முஸ்லிம்கள் நடத்தும் பெண் கல்வி நிலையங்களில்  அங்கு நிலவும் கண்ணியமான கலாச்சாரமும், பாதுகாப்பான  சூழலும் தான் என்பதாகும்.  


தற்போது கர்நாடக மாணவி மஸ்கான் ஏற்படுத்தியுள்ள ஹிஜாப் தொடர்பான விழிப்புணர்ச்சி;  இது போன்ற புதிய பெண்  கல்வி நிலையங்கள் உருவாகிட வழி திறந்திருப்பதாகவே கருதுகிறேன்.


மாவட்ட வாரியாக / மஹல்லா வாரியாக இது குறித்து ஜமாத்தினர் ஆலோசிக்க வேண்டும். 


1000 ரூபாய் தொடங்கி 1 லட்சம் ரூபாய் வரை பங்கு தொகைகளை பெற்று, பொது அறக்கட்டளைகள் நிறுவி,  பள்ளிக்கூடங்களை உருவாக்குவதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.


முக்கியமாக 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பெண்கள் பள்ளிக்கூடங்களே முதன்மை தேவைகளாக உள்ளது.


நகர்புறமாக இருப்பின் ஒரு ஏக்கர் இடமும், கிராமப்புறமாக இருப்பின் 3 ஏக்கர் இடமும் தேவை. 10 ஆயிரம் சதுர அடியில் கட்டிட அமைப்பு தேவை.


உள்கட்டமைப்பு, அரசு அனுமதி பெறுதல், மூன்றாண்டுகளுக்கான நிர்வாக செலவுகள் என 2 கோடி ரூபாய் மூலதனம் தேவைப்படும்.


மதரஸா இடங்கள் / மஸ்ஜித் வளாகங்கள் / தர்ஹா வளாகங்கள் / வக்பு நிலங்கள் ஆகியவற்றை இதற்கு பயன்படுத்திக் கொள்வது பற்றியும்  ஆய்வு செய்ய வேண்டும்.


தற்போது தமிழக முஸ்லிம் சமூகம் ஆற்றி வரும் கல்வி பணிகள்  பாராட்டும் வகையில் இருப்பதையும்  குறிப்பிட வேண்டியுள்ளது.


13 பெண்கள் கலைக்  கல்லூரிகள் மட்டுமின்றி, இருபாலர் பயிலும் 20  கலை அறிவியல் கல்லூரிகளும், 15 பொறியியல் கல்லூரிகளும், நடத்தப்படுகிறது.


இது தவிர  10 க்கும் மேற்பட்ட  பாலிடெக்னிக்குகள்,  40 க்கும் அதிகமான தனியார் மெட்ரிக்குலேஷன் மற்றும் CBSE பள்ளிக்கூடங்களும்  நடத்தப்படுகின்றன.


ஆயினும் வட இந்தியாவில் உள்ள ஜாமியாமில்லியா, அலிகர்( AMU) போன்ற உலக தரமிக்க பல்கலைக்கழகங்கள் தமிழக முஸ்லிம் சமூகத்திடம் இல்லை என்ற குறையும் இருக்கிறது.


சென்னைக்கு அருகிலோ அல்லது திருச்சி - தஞ்சைக்கு இடையிலோ இது போன்ற பல்கலைக்கழகங்கள் எதிர்காலத்தில்  உருவாகிட செயல் திட்டங்கள் தேவை.


அது போல் சட்டக் கல்லூரி ஒன்றும்,, வேளாண் கல்லூரி ஒன்றும் தேவையாக உள்ளது.


அங்கு அனைத்து மதத்தினரும், சாதியினரும் அவரவர் உரிமைகளோடு பயிலும் வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.


பொறுப்புமிக்க குடிமக்களை உருவாக்கும் அறிவு களங்களை கட்டமைப்பதன்  மூலமே காலத்தின் சவால்களையும், சமகால நெருக்கடிகளையும் எதிர்கொள்ள முடியும்.


ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், செல்வந்தர்கள், சமூக ஆர்வலர்கள் என பலதரப்பினரை  கொண்ட ஒருங்கிணைப்பு குழு மாவட்ட வாரியாக இதற்காக அமைக்கப்பட வேண்டும்.


 இத்துறை சார்ந்த நிபுணர்கள், ஒய்வு பெற்ற கல்லூரி முதல்வர்களிடமும் இது குறித்து கூடுதல் ஆலோசனைகளை பெறலாம்.


இதற்காக ஈராண்டு செயல் திட்டம் வகுத்து களமிறங்க வேண்டும்.


மாணவி மஸ்கானின் தியாகப்பூர்வ போராட்டத்திற்கு நாம் செலுத்தும் மரியாதை இதுவாகவே இருக்க வேண்டும்.


கவிஞர் அல்லமா இக்பாலின் புகழ் பெற்ற கவிதை நினைவுக்கு வருகிறது.


'அறிவாளிகளை கொண்ட

கூட்டத்திற்கு

ஆயுதங்கள் தேவையில்லை'

Tags: கட்டுரை

Share this